சமரசமின்றிப் பேனாவைக் கடைசி வரையில் இயக்கி வாழ்ந்திட முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் இந்த முன்னோடி! இதழாளர் குமரேசன் புகழஞ்சலி

இடது சாரி சிந்தனையாளரும், மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான தோழர் இரா.ஜவஹருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.

இவரது மறைவுக்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இவரது மறைவுக்கு மூத்த இதழாளர் குமரேசன் எழுதிய புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர், “உள்ளத்தில் குடியேறிய சிலரது மரணச் செய்தி தருகிற துக்கத்தைப் போலவே, அதைத் தாமதமாக அறிய நேர்கையில் ஏற்படுகிற உறுத்தலும் ஆழமானது. தோழர் இரா. ஜவஹர் மறைந்துவிட்ட தகவலின் துக்கத்திலும் உறுத்தலிலும் அல்லாடுகிறது மனம்.

லட்சியம் சார்ந்த பத்திரிகையாளராக, சமரசமின்றிப் பேனாவைக் கடைசி வரையில் இயக்கி வாழ்ந்திட முடியும் என்று காட்டிச் சென்றிருக்கிறார் இந்த முன்னோடி.

எனது கட்டுரைகள் வெளியானதும் முதல் கருத்து அவரிடமிருந்துதான் வரும். அதில் எதிர்பார்ப்பற்ற பாராட்டும் இருக்கும், உள்நோக்கமற்ற விமர்சனமும் இருக்கும்.

ஒரு கட்டுரையில் இந்தியச் சமுதாயத்தின் இரண்டு தண்டவாளங்களில் ஒன்று சாதியம், இன்னொன்று பெண்ணடிமை என்று எழுதியிருந்தேன். படித்தவுடன் தொடர்புகொண்ட அவர், “இன்னொரு தண்டவாளத்தை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் – அதுதான் வர்க்கம்,” என்றார். அதைக் குறிப்பிடாதற்கு நான் கூறிய விளக்கம், அதற்கு அவருடைய மறுவிளக்கம் என எங்களுக்கிடையே நடைபெற்ற விவாதம் என் எழுத்துக்குக் கூர்மை் சேர்த்தது.

தோழமைகளிடம் அன்பைப் பொழிவதில், பெண்களை சரிநிகர் சமானமாகக் களமாட ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே. ஊடகவியலாளர்கள் போராடுகிறபோதெல்லாம் உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் முதல் ஆளாக அவரும் வந்து நிற்க, இளைய தலைமுறையினர் பெற்ற ஊக்கம் அளவிடற்கரியது.

‘கம்யூனிசம் – நேற்று இன்று நாளை’, ‘ஒரு மார்க்சியப் பார்வை’, ‘மகளிர் தினம் – உண்மை வரலாறு’ உள்ளிட்ட தனது புத்தகங்களில் மட்டுமல்ல, இப்படிப்பட்ட முன்னுதாரணச் செயல்களிலும் வாழ்ந்துகொண்டிருப்பார் ஜவஹர்.

செவ்வணக்கம் தோழர்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *