கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கான ரெம்டெவிசர் மருந்து விற்பனை
தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெவிசர் மருந்து தான் அதிகமாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
இதனால், இந்த மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு இது இலவசமாக வழங்கப்பட்டுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் விலை கொடுத்தே வாங்கி வருகின்றனர்.
தற்போது, தட்டுப்பாடு நிலவுவதால் இதை காரணமாக வைத்து சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஒரு கொரோனா நோயாளிக்கு 6 ரெம்டெவிசர் மருந்துகள் வழங்கப்படுகிறது. அதிக விலைக்கு விற்கப்படுவதால் பலர் வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று சமூக வலைதளங்களில் ஒரு காணொலி அனைவராலும் பகிரப்பட்டு வந்தது. அதில், கொரோனாவிற்கான ரெட்டெவிசர் மருத்துகள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மருந்தகத்தில் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நோயாளியின் ஆதார் அட்டை, மருந்துக்கான மருத்துவரின் பரிந்துரை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைச் சான்று, நோயாளியின் சி.டி. ஸ்கேன் போன்ற ஆவணங்களுடன் வந்து வாங்கிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நிர்ணயித்த விலைக்கே விற்பனை செய்வதால் பொது மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.