குளுகுளு கொடைக்கானலில் குடும்பத்துடன் கெத்துக்காட்டும் திமுக தலைவர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.
கடந்த 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடும் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் ஓய்விற்க்காக கொடைக்கானல் செல்ல முடிவு செய்தார்.
அதன்படி சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் வந்தடைந்தார். அங்கு கொடைக்கானலிலிருந்து பாம்பார்புரம் செல்லும் வழியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஸ்டாலின் தங்கியுள்ளார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் கொடைக்கானல் வந்துள்ளனர்.
இதனையடுத்து கொடைக்கானல் வந்துள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியுள்ள தனியார் விடுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.