துப்பாக்கிச்சூட்டிற்கும் அஞ்சாத மக்கள்; ஆங் சாங் சூகி மற்றும் அதிபர் மீது தேசத் துரோக வழக்கு

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனைக் கண்டித்து கடந்த 4 வாரங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்கக்கோரி ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

யாங்கூன், டாவே, மாண்டலே, மியேக் உள்ளிட்ட நகரங்களில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 18 பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரகள் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், பலரின் நிலை குறித்து தகவல் இல்லாததால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆனால், ராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல் திங்கட்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியுடன் போராட்டம் நடத்தினர். யங்கூன் நகரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ராணுவத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். மாண்டலே, டேவி நகரங்களில் ராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாண்டலேவில் நடைபெற்ற பேரணியில் புத்தகுருமார்களும் கலந்து கொண்டு ராணுவ ஆட்சிக்கு எதிரான வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
கண்ணீர் புகை குண்டு மற்றும் கையெறி குண்டுகளை வீசி போராட்டக்கார்களை விரட்டினர். இருப்பினும், ராணுவத்தினர் திரும்பி சென்ற பிறகு மக்கள் சாலைகளில் குவிந்து வருவதால் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவம் திணறி வருகிறது.
இதற்கிடையே, ஆங் சாங் சூகி உள்ளிட்டோர் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆங் சாங் சூகி, அதிபர் வின் மின்ட் ஆகியோர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன.