பெட்ரோலுடன், எத்தனாலைப் போல் தண்ணீரும் கலப்பா?

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. மேலும், மாசுபாட்டைக் குறைக்க பெட்ரோல் மற்றும் டீசலில் 10% எத்தனாலை கலக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

மேலும், பெட்ரோல் டேங்கில் சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் எத்தனால் கலந்த பெட்ரோலுடன் தண்ணீர் சேர்ந்து, வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பெட்ரோலியத்துறை சார்பில் பொதுமக்களுக்கும், பெட்ரோல் பங்க் நடத்துபவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் பெட்ரோலிய பங்கில் நேற்றிரவு ஒருவர் 1000-ரூபாய்க்கு தனது காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது, சுமார் 1 கிலோ மீட்டர் மட்டுமே சென்ற நிலையில் கார் நின்று விட்டது. இவரைப் போலவே, அதே பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்ட மற்றொருவருக்கும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர்களிடம் இது குறித்துக் கேட்டுள்ளார். இருப்பினும்  அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக, பெட்ரோல் பங்க் நிர்வாகியிடம் கேட்டபோது, தற்போது வரும் பெட்ரோலில் எத்தனால் கலந்து வருவதால் வாகனத்தைக் கழுவும் போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் படாமல் கழுவ வேண்டும் எனவும், அப்படித் தவறுதலாகத் தண்ணீர் பட்டால் இதுபோன்று வாகனங்கள் பாதி வழியிலேயே நின்று விடும் எனத் தெரிவித்தார்.

மேலும், தங்களிடம் உள்ள பெட்ரோலை பரிசோதனை செய்து விட்டதாகவும், அதில் தண்ணீர் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து, பொட்ரோலியத் துறை அதிகாரிகள் பெட்ரோல் பங்கில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.  மறு உத்தரவு வரும் வரை பெட்ரோல், டீசலை விற்கவும் தடை விதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *