முதல்வர், ‘அடிக்கல் நாயகன்’ – கனிமொழி
தருமபுரி அடுத்த பழைய தருமபுரி சமுதாயக் கூடத்தில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, மகளிர் சுய உதவிக் குழுக்களை இன்று காலை சந்தித்தார்.
இதன் பின்னர் ,கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து ஆளுங்கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தார். தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் 85. ஆனால், உயர் கல்வி அமைச்சரின் மாவட்டமான தருமபுரியில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் 67. ஆட்சியாளர்கள் மக்களின் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதை அறிய இது ஒன்றே போதும்.
குடிமராமத்துப் பணிகளில் கணக்கு மட்டுமே எழுதி விட்டு பணிகளை செய்யாமல் விட்டுள்ளனர். நீர்நிலைகளை மூடிவிட்டு மனைகளாக்கி ஆளும்கட்சியினர் விற்றுள்ளனர்.
விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் சட்டங்களை ஆதரிப்பவராக இங்குள்ள முதல்வர் இருக்கிறார். தமிழகத்தில் பல திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார். ஆனால், திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நாயகனாக மட்டுமே தமிழக முதல்வர் இருக்கிறார். பணிகள் எதுவும் நடப்பதே இல்லை.
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் தொடர் விலையேற்றம் மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. பெண்கள் விறகு அடுப்புக்கு மாறி மீண்டும் சிரமப்படுவர். விவசாயிகள், வாகனங்களுக்கு பதிலாக மாட்டுவண்டிகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. உலக சந்தையில் பெட்ரோல் பொருட்கள் விலை ஏறவே இல்லை. ஆனால், இந்தியாவில் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏறிக் கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலைவாசியும் ஏறுகிறது.
கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற சுமைகள் சுமத்தப்படுகிறது. திமுக பொய்யான வாக்குறுதிகள் தருகிறது என அதிமுக தொடர்ந்து குற்றச் சாட்டு கூறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், திமுக அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும், அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் நிறைவேற்றித் தரப்படும். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.