விவசாய போராட்டங்களில் இந்திய சமையற்காரர்களும், உணவக உரிமையாளர்களும் ஏன் பங்கேற்க வேண்டும்
தலைநகர் டெல்லியில், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய சமையல்காரர்களும், உணவக உரிமையாளர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமையல்காரர்களும், உணவக உரிமையாளர்களும் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களும் நாங்கள் விளைவிப்பதை பாதிப்பது மட்டுமல்லாமல் நாம் உண்பதையும் பாதிக்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உணவகத்துறையை சேர்ந்த பலருக்கு, விவசாய பிரச்சனைகள் தங்களுக்கு சம்மந்தமில்லாதது என்று தோன்றலாம். ஆனால், விவசாயம்,உணவு பழக்கம், சமையல் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எனவே, உணவுத்துறையில் சம்பந்தப்பட்ட அனைவரும் சிங்கு, திப்ரி காசிபூர் எல்லைகளில் என்ன நடக்கிறது என்று கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாய சட்டங்களை முழுமையாக ஆராய்ந்து, அதில் உள்ள குறைகளைக் கண்டறிந்து ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பசுமை புரட்சி தொடங்கப்பட்டது. அத்தியாவசிய உணவு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நெல் மற்றும் கோதுமைகளின் சாகுபடிக்கு அதிக பரப்பளவு ஒதுக்கப்பட்டது. இதனால், சோளம், கம்பு, திணை உள்ளிட்ட பயிர்களுக்கான பரப்பளவு 37.67 ஹெக்டேரிலிருந்து 25. 67 ஹெக்டேராக குறைந்துள்ளது.
பசுமை புரட்சியில், ராக் பெல்லர் என்ற அறக்கட்டளை முக்கிய பங்கு வகித்தது. இது இந்திய அரசுக்கு அதிக மகசூல் தரும் விதைகளை கொடுத்தது. உணவுப் பற்றாக்குறையை போக்க அரசும், அதிக மகசூல் தரும் நெல் மற்றும் கோதுமையின் விதைகளை ஊக்கத்தொகையுடன் கொடுத்தது. இதனால் நெல் மற்றும் கோதுமையின் விளைச்சல் அதிகரித்தது. ஆனால், ஊட்டச்சத்து தானியங்களின் விளைச்சல் குறைவானது.
விவசாய உற்பத்தி மற்றும் உணவுபொருட்களில் தன்னிறைவை அடைவதற்கான தனது தோடலில் ஊட்டச்சத்தைப் பற்றி இந்தியா மறந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகமாகி விட்டனர். இதற்கான காரணத்தை ஆராயும் போது, தேசிய உணவு பாதுகாப்பு தான் நம் கண் முன் வருகிறது. மேலும், குழந்தைகள் ஊட்டச்சத்து அதிகமான உணவுகளான பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகளை தவிர்த்து விட்டு, கார்போஹெட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர். இதுவும் இன்றைய குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட காரணமாக உள்ளது.
எனவே, விவசாயத்திற்கும் உணவு பொருட்களுக்கும் உள்ள தொடர்பு முக்கியமானது. சமையல்காரர்கள், இது தங்கள் பிரச்சனை அல்ல என்று ஒதுங்காமல் விவசாயிகளுடன் சேர்ந்து போராட வேண்டும்.