மழை பாதிப்பிற்கான கட்டுப்பாட்டு அறை தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையை எண் 04364- 222588 என்ற தொலைபேசி எண்ணிலும், 7092255255 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை துறை அமைச்சர் மெய்யநாதன் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், வேட்டங்குடி, கூழையார், பழையாறு சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தண்ணீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றம் செய்யும் பணி, ஆறுகள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் நீரின் போக்கு உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் 346 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
201 முகாம்கள் தாழ்வான இடங்களில் உள்ளன. இன்னும் 4 நாட்கள் கன மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிக அளவு மழை பெய்துள்ள பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியில் வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டிருந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்ணீர் வடியச்செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திறக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 04364- 222588 என்ற தொலைபேசி எண்ணிலும், 7092255255 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்போடு குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், சிறு பாலங்கள் குறித்து விரைவில் கணக்கெடுக்கப்பட்டு சீரமைக்கவும், பயிர் பாதிப்பு குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம் பி ராமலிங்கம், சீர்காழி எம் எல் ஏ பன்னீர்செல்வம், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.