உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 4 பேராசிரியர்கள்…

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் உலக அளவில்  22 அறிவியல் துறைகள், 176 துணைத் துறைகளில்  உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் இடம் பிடித்துள்ளனர். 

இதில் திண்டுக்கல்  காந்திகிராம  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  பி.பாலசுப்பிரமணியம் (கணித துறை) எம்.ஜி.சேதுராமன்,   எஸ்.மீனாட்சி ஆகியோர் (வேதியியல் துறை) மற்றும்  கே.மாரிமுத்து, (இயற்பியல் துறை) ஆகிய 4 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் விஞ்ஞானி பி.பாலசுப்பிரமணியம் தெளிவற்ற தர்க்க அணுகுமுறைகளைப் பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தரப் படமாக மாற்றுதல் மேலும் கிரிப்டோகிராபி மற்றும் செயலாக்கத் தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியைக் கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதற்காகவும், 

விஞ்ஞானி  எம்.ஜி.சேதுராமன்  தாவர மூலப்பொருட்களில் இருந்து வரும் சேர்மங்களைக் கொண்டு உலோக அரிப்புகளைத் தடுக்கும் காரணிகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருவதற்காகவும்,  விஞ்ஞானி  எஸ்.மீனாட்சி, கழிவு நீரில் இருந்து நச்சுத்தன்மையுள்ள ஃபுளூரைடு, காரியம், குரோமியம், பாதரசம் மற்றும் நச்சுக்களை உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருவதற்காகவும்  

விஞ்ஞானி கே.மாரிமுத்து அரிதான பூமியின் தாதுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி மற்றும் லேசர் ஒளி உமிழ்வதற்கான ஆய்வு மற்றும் அபாயகரக் கதிர்வீச்சைத் தடுப்பதற்கான கண்ணாடிகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்காகவும்  2019, 2020, 2021 -ஆகிய 3  ஆண்டுகளில் வெளியிடப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.  தற்போது 4 – வது முறையாக  2022 ஆம் ஆண்டுக்கான  உலகின் சிறந்த விஞ்ஞானிகளாக   தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *