என்எல்சியின் விளை நிலங்களில் கால்வாய் வெட்டும் பணி நிறுத்திவைப்பு..!

சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனத்தின் சிறு, சிறு பணிகள் துவங்கியது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த விளை நிலங்களில் கால்வாய் வெட்டும் பணி நடைபெறவில்லை. எஞ்சிய சிறு பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது 

சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியினை கடந்த 26 ஆம் தேதி துவக்கியது. விளை நிலங்களில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி நடந்தது. இதில் உள்ள நெற்பயிர்கள் அழிக்கப்பட்டதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் அந்த பணிகள் நடந்தன. ஆனால் பணிகள் முழுமை அடையவில்லை.

இந்த நிலையில் நேற்று பாமகவினர் என்எல்சி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக நேற்று வளையமாதேவி கிராமத்தில் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில்  4வது நாளான இன்று வளையமாதேவி கிராமத்தில் சிறு சிறு பணிகள் துவங்கி உள்ளது. 

விளை நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிக்கு எதிர்ப்புகள் எழுந்ததால் அந்த இடங்களில் பணிகள் துவக்கப்படவில்லை. அந்த பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மாறாக மற்ற இடங்களில் சிறு, சிறு பணிகள் நடந்து வருகிறது. 26 ஆம் தேதி வளையமாதேவி கிராமத்திலிருந்து கரிவெட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலையை துண்டித்து விட்டு அதற்கு அடியில் ராட்சத சிமெண்ட் குழாய்கள் புதைத்து தற்காலிக சாலை அமைத்தனர். அந்த சாலை அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது செம்மண்ணைக் கொட்டி சாலையை உறுதிப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

அதற்கு அருகிலேயே சுமார் ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட அதே பரவலாறு கால்வாயின் மறுபக்கத்தில் பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் வடிகால் கால்வாயின் ஆழத்தை அதிகரிக்கும் பணியும், கரைகளை பலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. 7க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வளையமாதேவி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *