சார்க் நாடுகளின் ஒப்பந்ததால் பாரம்பரிய கொசுவலை தொழில் அழியும்.! உற்பத்தியாளர்கள் வேதனை

இந்த ஒப்பந்தத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட  வங்கதேசம், சீனா, பங்களாதேசம் போன்ற நாடுகள் தங்களுடன் விலையில் போட்டி போட  முடியாத வகையில் மிக குறைந்த விலைக்கு  கொசுவலைகள் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதனால், கொசு வலை தொழில் தடுமாறி வருகிறது.

வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அரசு கைவிடாவிட்டால்,  இத்தொழில் கைவிடுவதை தவிர வேறு எந்த வழியும் தெரியவில்லை என கொசுவலை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். டெக்ஸ் சிட்டி என அழைக்கப்படும் கரூரில், வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி தொழிலுக்கு அடுத்தபடியாக  பாரம்பரிய கொசுவலைகள் உற்பத்தி தொழில் பெரிய அளவில் செய்யப்பட்டு வருகிறது.

கரூரில் சுமார் 100க்கும் மேற்பட்ட கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் கொசுவலைகள் மேற்குவங்கம், உத்தரபிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரம் உள்பட பல மாநிலங்களுக்கும், உள்ளூரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கரூர் மாவட்டத்தில் மட்டும் கொசுவலை உற்பத்தி தொழிலில் நேரிடையாக, 20,000 பேரும், மறைமுகமாக, 15,000 பேருக்கும் பணி வாய்ப்பு பெற்று வருகின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் வரை கரூரில் கொசு வலை மூலம் வர்த்தகம் நடந்து வந்தது. சார்க் வரியில்லா ஒப்பந்தத்தால் இந்தத் தொழில் தற்போது அடியோடு புரட்டி போடப்பட்டுள்ளது.

உள்நாட்டு  தொழில் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பாதுகாப்பு தீர்வை என்ற, 20 சதவீதம் சுங்கவரி இறக்குமதி செய்யப்படும் கொசுவலைகளுக்கு விதிக்கப்பட்டு வந்தது. ஆனால்,  2012 ம் ஆண்டு வங்கதேசம், இலங்கை உள்பட சார்க் நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால், வங்கதேசத்தில் இருந்து கொசுவலையை  மிகுந்த குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. 

இதுமட்டுமல்லாது, உள்நாட்டு கொசுவலையில், 18 சதவீதம் மூலப் பொருட்களுக்கும், 5 சதவீதம் உற்பத்தி பொருளுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில், வரியில், 13 சதவீதம் மட்டுமே ரீபண்ட்  கிடைக்கிறது. வங்கதேச கொசுவலைக்கு, 5 சதவீதம் ஐ.ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்படும் இந்த நிலையில், அதனை முழுவதும் ரீபண்ட் பெற்று விடுகின்றனர். இதனால், வங்கதேசத்தில் இருந்து வரும் கொசுவலை விற்பனையில் விலையில் போட்டி போடமுடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2012ம் ஆண்டு வரை, ராணுவ பயன்பாட்டுக்கும், 2,000 பேல்கள் முதல் 3,000 பேல்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்மூலம், 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்த வந்தது. அதுவும்,  11 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. மாநில அரசின் விலையில்லா கொசுவலை வழங்கும் திட்டமும் கைவிட்டது, 

இதுபோன்ற காரணங்களால் உள்நாட்டு கொசுவலைகள் தேக்கமடைந்து வருகின்றன. அடுத்த ஆண்டு சார்க் நாடுகளில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காலாவதியாகும் நிலையில், மீண்டும் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க கூடாது. அப்படி புதுப்பிக்கும் பட்சத்தில் பாரம்பரிய கொசுவலை உற்பத்தி தொழிலுக்கு மானியம் வழங்க வேண்டும். அப்போது தான் வங்கதேசம், சீனா போன்ற நாடுகளுடன் தொழிலில் போட்டி போடமுடியும்.

கரூரில், 24 மணிநேரமும் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கொசுவலை உற்பத்தி தற்போது ஆடர்ருக்கு ஏற்ப உற்பத்தியை நிறுத்தி, நிறுத்தி செய்யவேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதனால், இதை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அழிந்துவரும் சிறு, குறு தொழில்கள் பட்டியலில் கொசுவலை உற்பத்தி நிறுவனங்களை சேர்த்து விடாமல் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *