போராட்டத்தை கைவிடவில்லை- மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

டெல்லியில் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த போராட்டக் களத்திலிருந்து வெளியேறியதாக வெளியான தகவலை சாக்ஷி மாலிக் மறுத்துள்ளார்.இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். அவரை உடனடியாக கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட் வரை சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர வேண்டியிருந்தது. ஆனால் வழக்குப் பதிவு செய்த பின்னரும் பிரிஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின் போது அந்த கட்டடம் வரை பேரணி நடத்த வீரர்கள் முடிவு செய்தனர். அப்போது வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்து செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சர்வதேச தொடர்களில் வென்ற பதக்கங்களுடன் வீரர், வீராங்கனைகள் ஹரித்துவாருக்கு சென்றனர். அப்போது அவர்களை விவசாயச் சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர். மேலும் 5 நாட்களுக்குள் பிரிஜ் பூஷனை கைது செய்யவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஜூன் 9ஆம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டெல்லி சென்று ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதாக விவசாய சங்கத்தின் ராகேஷ் டிக்கைட் தெரிவித்திருந்தார். இவர்களது போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். போராட்டக்காரர்களை பிரியங்கா காந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அது போல் திரைபிரபலங்கள், விளையாட்டு வீரர்களும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் அவர்களிடம் சரியான ஆதாரம் இருந்தால் தான் தூக்கில் தொங்கவும் தயார் என கூறியுள்ளார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை செவி சாய்க்க வேண்டும் என உலக மல்யுத்த சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்களின் குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நீக்கிவிடுவோம் என்றும் இனி அவர்கள் போட்டியிட்டால் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் போராட்டத்திலிருந்து சாக்ஷி மாலிக் வெளியேறியதாக தகவல்கள் வெளிவந்தன. அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்திய நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் ரயில்வே பணிக்கு திரும்பியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த செய்தியை மறுத்து சாக்ஷி மாலிக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவலை பரப்பாதீர்கள். நீதிக்கான போராட்டத்திலிருந்து யாரும் பின்வாங்க வில்லை. பின்வாங்கவும் மாட்டோம் என சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *