‘4/20’ சந்தா செலுத்தாத கணக்குகளின் ப்ளூ டிக் அகற்றப்படும் கெடு தேதி – மஸ்க் அறிவிப்பு

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

 ப்ளூ டிக் அங்கீகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கெடு தேதி நிர்ணயித்துள்ளார் ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க். அதாவது ஏப்ரல் 20-ம் (4/20) தேதிக்குப் பின்னர் சந்தா செலுத்திய கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர் கணக்குகளிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னர், ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது ட்விட்டர். இவர்கள் அனைவரும் சந்தா கட்டணம் செலுத்தாமல் இந்த அம்சத்தை பெற்று வந்த சூழலில் தற்போது அதற்கான கட்டணத்தை இவர்களும் செலுத்த வேண்டி உள்ளது. முன்னதாக, இந்த கணக்குகளை பயன்படுத்தி வரும் பயனர்கள் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் சந்தா செலுத்தவில்லை என்றால் ‘ப்ளூ டிக்’ அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என ட்விட்டர் தெரிவித்தது. இருந்தும் சந்தா செலுத்தாத பயனர்களில் பெரும்பாலோனார் ப்ளூ டிக் அடையாளக் குறியை தொடர்ந்து பெற்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை மஸ்க் அறிவித்துள்ளார்.

“ப்ளூ டிக் அங்கீகாரம் நீக்கப்படுவதற்கான இறுதி தேதி 4/20” என மஸ்க் ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் லோகோவை மாற்றியது, ஊழியர்களை பணி நீக்கம் செய்தது என பரபரவென எப்போதும் ட்விட்டர் குறித்து உலகமே பேசும் வகையிலான செயல்களை அவர் முன்னெடுத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *