2100 உலக ஜனத்தொகையில் பெரும் சரிவு! – ஆதனூர் சோழன்

2022 கணக்கெடுப்பின்படி உலகின் ஜனத்தொகை 796 கோடி என்கிறார்கள். ஆனால், 2100 ஆம் ஆண்டு, அதாவது அடுத்த 78 ஆண்டுகள் கழித்து இது 600 கோடியாக குறையும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

அதேசமயம் 2050 ஆம் ஆண்டு வாக்கில் உலக ஜனத்தொகை 860 கோடியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

அதெப்படி, இந்த நூற்றாண்டின் மத்தியில் 860 கோடியாக உயரும் ஜனத்தொகை, நூற்றாண்டு இறுதியில், அதாவது 22ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 600 கோடியாக குறையும் என்ற கேள்வி எழுகிறதா?

பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாறுதல்களால் அபாயகரமான உயிரிழப்புகள் நிகழும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

40 ஆண்டுகளில் மனித சராசரி வயது அதிகரிக்கும்!

ஒருபக்கம் பார்த்தால் 2050 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகின் மக்கள் தொகை சரியத் தொடங்கும் என்று சொல்கிறார்கள். பூமியின் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்சனையால் எதிர்பாராத உயிரிழப்புகள் மக்கள் தொகை குறைய காரணமாக இருக்கும் என்று அச்சுறுத்துகிறார்கள்.

மறுபக்கமோ, மனிதர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிக்கும் என்றும், அதிகபட்சமாக 150 வயது வரை வாழக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதுவரை பூமியில் வாழ்ந்தவர்களில் அதிகபட்சமாக ஜீன் லூயிஸ் கல்மென்ட் என்ற பெண் 122 வயது வரை வாழ்ந்து 1997 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். கடந்த 25 ஆண்டுகளில் இவர் அளவுக்கு அதிக வயது வாழ்ந்த யாரும் இல்லை.

மனிதர்களின் சராசரி வயது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1700 முதல் 1900 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களையும், 1900 முதல் 1969 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களையும் ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வில் கோடிக்கணக்கான மக்களின் பிறந்த மற்றும் இறந்த தேதிகள் கணக்கிடப்பட்டன. 1700 முதல் 1900 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இறப்பு வயது மிகக் குறைவாக இருந்தது. 50 முதல் 100 வயதுக்கு இடையில் இறப்போர் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது.

1910 முதல் 1950 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகவயது வாழ்வோர் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.

அடுத்த 40 ஆண்டுகளில் அதிக வயது வாழ்வோர் எண்ணிக்கை அல்லது மனிதர்களின் அதிகபட்ச வாழ்நாள் கூடும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு பிஎல்ஓஎஸ் ஒன் இதழின் மார்ச் 29 தேதியிட்ட இதழில் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *