செத்து விளையாடி உறவுக்கு அழைக்கும் சிலந்தி! – ஆதனூர் சோழன்

புனல் வடிவ வலை பின்னும் ஒரு வகை பெண் சிலந்தி உறவுக்கு ஆண் சிலந்தியை தேர்வு செய்ய வினோதமான நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

பொதுவாக, இந்த வகை சிலந்திகள் உடலுறவு முடிந்தவுடன் ஆண் சிலந்தியை கொன்று தின்றுவிடும் பழக்கம் உடையவை. அதன் காரணமாக உறவுக்கு ஆள் தேடுவதற்காக பெண் சிலந்திகள் சுருண்டு செத்தது போல நடிக்கின்றன.

இதன்மூலம் தன்னை நாடி தனக்கு உதவ வரும் ஆண் சிலந்தியை உறவுக்கு தேர்வு செய்கின்றன. மேலும் இப்படியான நடவடிக்கையின் மூலம் ஆண் சிலந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்காது என்ற உத்தரவாதத்தையும் பெண் சிலந்தி அளிக்கிறது என்கிறார்கள்.

உடலுறவு முடிந்ததும் ஆண் சிலந்திகளை கொன்று தின்னும் பழக்கம் காரணமாக ஆண் சிலந்திகள் உடலுறவுக்கு அஞ்சும் நிலை இருப்பதாகவும், ஆண் சிலந்திகளில் துணிச்சலான, சாவுக்கும் துணிந்த சிலந்தியை தேர்வு செய்ய பெண் சிலந்திகள் இந்த புதிய உத்தியை பயன்படுத்துகின்றன என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நிலவில் கோடிக்கணக்கான டன் தண்ணீர்

சீனா அனுப்பிய சேங் – 5 என்ற விண்கலம் நிலவில் சேகரித்து திரும்பிய மண்ணில் கண்ணாடித் துகள் வடிவில் நீர் இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நிலவின் மண்ணில் கலந்துள்ள இந்த கண்ணாடி உருண்டைகளுக்குள் ஒளிந்திருக்கும் நீர் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். இந்த கண்ணாடி உருண்டைகளுக்குள் 330 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதாக கூறுகிறார்கள்.

காலங்காட்டியா? முன்னோர் நினைவுத்தூணா?

இங்கிலாந்தில் இன்றிலிருந்து சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஊன்றப்பட்டதாக ஸ்டோன்ஹெஞ்ச் அல்லது கல்வட்டம் கருதப்படுகிறது.

நம்ம ஊரு சுமைதாங்கி போல தோற்றமளிக்கும் இந்த கல்வட்டம் சூரியனை மையப்படுத்திய காலங்காட்டியாக கருதப்பட்டது. இந்த இடத்தில் நிறைய புதைவிடம் இருப்பதால் முன்னோர் நினைவாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடையில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கல்வட்டம், காலங்காட்டியாக பயன்பட்டது. ஆண்டுக்கு 356.25 நாட்களை கணக்கிட இது பயன்பட்டது என்று கடந்த ஆண்டு ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது.

டிமோத்தி டார்வில் என்ற தொல்லியல் நிபுணர் வெளியிட்ட அந்த ஆய்வு முடிவை ஜியுலியோ மாக்லி, ஜுவான் ஆண்டனியோ பெல்மோன்டி என்ற இரு வானியல் நிபுணர்கள் மறுத்துள்ளனர். இந்த கல்வட்டம் முன்னோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத் தூண்கள்தான் என்று அவர்கள் கூறியுள்ளனர். இவர்களுடைய ஆய்வு முடிவு மார்ச் 23 தேதியிட்ட ஆண்டிக்குய்ட்டி இதழில் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *