ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய கும்பல் கைது…!

வேலூர் கோட்டை சுற்றி பார்க்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய கும்பல் சிக்கியது. பொது இடங்களில் தனிமனித உரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து மிரட்டுபவர்கள் மீது  கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் எச்சரித்துள்ளார்.

16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாதலமாக விளங்கும் வேலூர் கோட்டையை சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில மக்களும் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். சிலர் கோட்டை புல்வெளியில் அமர்ந்து பொழுதுபோக்கி செல்வதும் நடக்கிறது. 

இதனால் சமூக விரோதிகள் சிலர் சுற்றித்திரியும் காதல்ஜோடிகளிடம் அத்துமீறல் சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து கண்காணித்து வந்தனர். தற்போது காவலர்கள் பற்றாக்குறையால் போலீஸ் கண்காணிப்பு எதுவும் இல்லை. இந்த நிலையில் வேலூர் கோட்டையில் கடந்த 27ம் தேதி காதல்ஜோடிகள் கோட்டையை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அவர்களை குறுக்கிட்ட ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி, அவர்களின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை அந்த நபர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சைபர் குற்றத்தின் கீழ் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த வீடியோவை பரப்பிய நபர்கள் மீது விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வீடியோவை யாரும் சமூக வலைதளங்கள் மற்றும் இதர தளங்களில் பகிரக்கூடாது. மீறி வீடியோ பதிவினை சமூக வலைதளத்திலோ மற்றும் இதர தளங்களிலோ பரப்பும் நபர்கள் மீது சைபர் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் எச்சரித்துள்ளர். மேலும் இந்த வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர்களை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்து, அதனை ஆய்வுக்காக சைபர் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இருபிரிவினர் இடையே மத பிரிவினைவாதம் ஏற்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இர்பான்பாஷா (22), இப்ராகிம்பாஷா (21), முகமது பயாஸ் (21), அஸ்ரம் பாஷா (22), சந்தோஷ் (22), பிரசாந்த் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ நீக்கப்பட்டது. இதைதொடர்ந்து, 17 வயது சிறாரை தவிர்த்து 6 பேர்  வேலூர் ெஜஎம்-4 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 17 வயது சிறார் மட்டும் வேலூர் இளஞ் சிறார் நீதிமன்ற நீதி குழும நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். 

இதில் 6 பேரை 15 நாள் நீதிமன்ற காவலில் வரும் 13ம் தேதி வரை வேலூர் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வேலூர் கோட்டையில் ரோந்துபணி இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் கூறுகையில். வேலூர் கோட்டையில் இனி நிரந்தரமாக போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். 

வீடியோ எடுத்ததன் நோக்கம் குறித்து கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இந்த வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம். பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டைக்கு வரும் பயணிகள் அச்சப்பட தேவையில்லை’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *