முகமூடி அணிந்து ஓட்டலை சூறையாடிய அதிமுக நபர்கள் அராஜகம்

முகமூடி கும்பல் அட்டூழியம்… அதிமுக நிர்வாகிகள் இருவர் கோர்டில் சரண். காங்கயத்தில் ஹோட்டலை சூறையாடி உரிமையாளரை குடும்பத்துடன் கொலை செய்ய முயன்ற 20க்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல்,சிசிடிவி காட்சிகள் வெளியானது, இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் இருவர் கோர்டில் சரணடைந்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள வீரணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த 2021ம் ஆண்டு அ.தி.மு.க கவுன்சிலர் சுதாவின் கணவர் ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான இடத்தை 15 வருடங்களுக்கு நில வாடகைக்கு பேசி ஹோட்டல் ஆரம்பித்துள்ளார். 

பின்பு கடந்த 2 வருடங்களில் ஹோட்டலுக்காக ரூ.1கோடியே 30 லட்சம் வரை செலவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அ.தி.மு.க கவுன்சிலர் சுதா அவரது கணவர் ஈஸ்வரமூர்த்தி, சகோதரர் சுரேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்து ஹோட்டலை காலி செய்யும் படி மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு டாரஸ் லாரி மற்றும் கார்களில் முகமூடியுடன் வந்து இறங்கிய 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஹோட்டல் பணியாளர்களை தாக்கி, அங்கிருந்த கார் மற்றும் பொருட்களை அடித்து சேதப்படுத்தியது. இதுகுறித்து பெரியசாமி காங்கயம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். 

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி., யிடம் தாக்குதல் சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரத்துடன் காங்கயம் போலீசில் புகார் அளித்தும் இரண்டு அதிமுக ஒன்றிய கவுண்சிலர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றம் சாட்டினர். மேலும் காங்கேயம் காவல் ஆய்வாளர் தங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து தாங்கள் கொடுத்த புகார் மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறி அவரே தயார் செய்த புகார் மனுவில் தங்களை மிரட்டி கையெழுத்து பெற்றிருப்பதாகவும், 

அந்த புகார் மனுவை ரத்து செய்து தாங்கள் அளிக்கும் புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் காங்கேயம் காவல் ஆய்வாளர் சொல்வது போல் நடந்து கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாது என ஆய்வாளர் மிரட்டுவதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் புகார் தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தமுள்ளதாக கூறப்படும் பாப்பினி அதிமுக கவுன்சிலர் மைனர் என்கிற பழனிசாமி(55), வீரணம்பாளையம் அதிமுக கவுன்சிலர் சுதாவின் கணவர் ஈஸ்வரமூர்த்தி(50) ஆகியோர் இன்று காங்கயம் கோர்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர். 20க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *