HR உன்னகூப்பிடுறார்: தொடர் 49

பெரு நிறுவனங்களும், சமூகப் பொறுப்பும் (CSR)

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு பற்றி பேசும் முன், நேர்காணல் பற்றி சில வாசகர்கள் ஒரு சில கேள்விகள் கேட்டிருந்தனர் அவர்களுக்குத் தரும் பதில் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பயன்படும் என்பதால் இங்கு குறிப்பிடுகிறேன். நம் நாட்டின் உயர்ந்தபட்ச தேர்வான குடியுரிமைப்பணி மற்றும் தமிழ்நாடு அரசுப் பணிக்கானத் (UPSC/TNPSC) தேர்வில் உள்ள தகுதித் தேர்வுகள் அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கலாம், ஆனால் இறுதியாக நடைபெறும் நேர்முகத் தேர்வில்தான் பலர் கோட்டை விட்டுவிடுகின்றனர். அங்குதான் அதுவரை இல்லாத, கண்டிராத உளறலும், உதறலும் எடுக்கும். காரணம் என்ன? பதட்டம் தான், என்ன கேட்பாங்களோ, நாம ஏதும் உளறிடக் கூடாதே, இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாப்போயிருமே எனும் வீணான எண்ணம் மனதில் அங்கும் இங்கும் ஓடி நம்மை ஒரு வழி பண்ணிவிடும். நேர்முகத்தேர்வு பயங்களை எப்படிக் கையாளுவது என்பதுதான் நம் வாசகர்கள் பலரின் கேள்வியாக இருந்தது.

நேர்முகத் தேர்வு என்பது நம்மை கழித்துக் கட்டுவதற்காக அல்ல, மாறாக நம் தகுதிகளை நேரிடையாக உணர்த்தக் கிடைத்த ஒரு வாய்ப்பு எனும் எண்ணம் இருந்தாலே போதும், பாதி பயத்தை உடைத்துவிடலாம். நடப்புச் செய்திகளில் நம் கவனம் எப்படி உள்ளது? எதிர்காலத் திட்டங்கள், தேடல்கள் என்ன? ஒரு முக்கிய நிகழ்வு மற்றும் சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் பற்றிய தலைமைப்பண்பு, அவரது கருத்தாக்கங்கள் பற்றிய நம் எண்ணம். இவற்றில் நாம் கவனம் செலுத்தும் போது நம் விரிவான எண்ண அலைகள் பற்றி அறிந்து கொள்வார்கள். படிப்பு பற்றி ஏதும் இல்லையா? அதையெல்லாம் சரியாக செய்தததால்தான் இந்த இறுதி நிலையையே எட்டியுள்ளோம், ஆதலால் அது பற்றி சில குறிப்பிட்ட கேள்விகள் இருக்கலாம். குழுவோடு சேர்ந்து நீங்கள் எப்படிப் பயணிப்பீர்கள். உங்கள் கருத்துகளை பிறர் ஏற்கும் படி எவ்விதத்தில் அவர்களை கையாளுவீர்கள் போன்றவைதான் அதிகம் கேட்கப்படும். நேர்முகத் தேர்வு ஒன்றும் நம் உயிரை எடுக்கும் இடமல்ல மாறாக நம் எண்ணங்களுக்கும், முயற்சிக்கும் உயிர் கொடுக்குமிடம் எனப் புரிந்துகொள்வோம். வேலைக்கான நேர்முகத்தேர்வில் சிறப்பாக செய்தும் பணிக்கான ஆணையோ அல்லது அது பற்றி எவ்விதத் தகவலோ நீங்கள் பங்கெடுத்த நிறுவனத்தில் இருந்து வரவில்லை என்றால் சற்று மனக்கவலை இருக்கத்தான் செய்யும், நம் செயல்பாடைத் தாண்டி நிறுவன அடிப்படையில் வேறுசில முடிவெடுக்கும் கூறுகள் இருக்கும் அவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். ஆதலால் அதிலேயே மூழ்கிவிடாமலே அடுத்தது என்ன? எனும் ஆக்கம் நிறைந்த உத்வேகத்தோடு கடப்பதே நமக்கு நல்லது. நமக்கான பெரு வாய்ப்பு எது என தேடிப் பயணித்து கண்டடைவதில் தான் பெரு மகிழ்ச்சி இருக்கும். மனம் தளர வேண்டாம்.

இப்போது நாம் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு பற்றி பார்ப்போம். பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு (CSR) என்பது தற்போது அவசியமான பேசுபொருளாகி விட்டது. நிறுவனங்களைத் தங்களது வேலைக்காக வாடிக்கையாளர்கள் (Customers/Client) தேர்ந்தெடுப்பதில் இது தவிர்க்க இயலா அங்கமாகி விட்டது. நுகர்வோர்கள் (Consumers) கூட சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த நிறுவனங்களின் பொருள்களையே வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். நிறுவனங்கள் மக்கள் மற்றும் நிலத்தின் வளங்கள் மூலம்தான் லாபம் ஈட்டுகிறது. ஆதலால் அவர்கள் அவர்களுக்கு முழு ஈடுபாட்டோடு திருப்பித் தரவேண்டியது அவர்களது தார்மீகக் கடமை. சமூகப் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வது சமூகத்துக்கும் அவர்களுக்கும் நற்பலனைத் தரும்.

நிறுவனங்கள் சட்டம் 2013ன் அட்டவணை VII இன் கீழ் CSR செயல்பாடுகளை நிறுவனங்கள் சட்டம் 2013ன் கீழ் தகுதிபெறும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கீழ்காணும் செயல்பாடுகளுக்கு பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் தரலாம் என வரையறை செய்யப்பட்டுள்ளது.

  • பசி, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல்
  • கல்வியை ஊக்குவித்தல்
  • பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்
  • சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய செயல்பாடுகள் மற்றும்  முயற்சிகள்
  • தேசிய பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சார பாதுகாப்பு முயற்சிகள்
  • ஆயுதப்படை வீரர்கள், போர் விதவைகள் மற்றும் குடும்பங்களின் நன்மை மற்றும் ஆதரவை நிலைநாட்டல்
  • நாட்டின் முதன்மை அமைச்சரின் தேசிய நிவாரண நிதி, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் நலன் மேம்பாடு மற்றும் நிவாரணத்திற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு நிதிப் பங்களிப்பு செய்தல்.
  • அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குள் அமைந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிப்பு அல்லது நிதி வழங்குதல்
  • ஊரக வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்தல்.

இவை தவிர நிறுவனம் அமைந்துள்ள 10கிமீ சுற்றளவில் என்னென்ன சமூக மாற்றங்களை ஏற்படுத்தி மக்கள் மற்றும் சமூக நலனை மேம்படுத்த முடியுமோ அதிலெல்லாம் கவனம் செலுத்தி மேன்மை பெற வைப்பதும் நிறுவனங்களின் கடமையாகும்.

யாரெல்லாம் இந்த தகுதிப் பட்டியலுக்குள் வருவார்கள்? தனியார் துறை நிறுவனமாக இருந்தாலும் அல்லது பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பினை (CSR) அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நிறுவனம் பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றிற்குள் இருப்பது கட்டாயம், மேலும் இது தொடர்பாக ஒரு CSR குழுவை அந்தந்த நிறுவனம் உருவாக்க வேண்டும்.

  • நிகர மதிப்பு ரூ. 500 கோடி அல்லது அதற்கு மேல், அல்லது
  • ஆண்டு வருவாய் ரூ. 1000 கோடி அல்லது அதற்கு மேல், அல்லது
  • ஆண்டு வருமான லாபம் ரூ. 5 கோடி அல்லது அதற்கு மேல்.

எனது நிறுவனத்தில் இதை சிறப்பாக செய்வதற்காக தனிக்குழு அமைத்து செய்யப்பட்டு வருகிறோம். இதுவரை நான்கு அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பிட வசதி மற்றும் இன்னபிற வசதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு நல்லதோர் கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 2014ல் நான் பெற்ற முனைவர் பட்டமானது பெரு நிறுவங்களின் சமூகப் பங்களிப்பு பற்றிதான். எனக்குப் பிடித்தமான ஒன்றில் இப்பணியும் ஒன்று. ஒட்டுமொத்த ஈடுபாட்டோடு இதை செய்வதில் எண்ணற்ற இன்பம் உண்டு.

பொறுப்புள்ள மக்களால் தான் பொறுப்புள்ள சமுதாயம் கட்டமைக்கப்படும். பொறுப்புள்ள நிறுவனங்களால்தான் நாட்டின் பொருளாதாரம் வலுவாகும்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *