இந்து கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்களின் தண்ணீர் பந்தல்.. எமோஷ்னல் மொமண்ட்…!

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்து முஸ்லீம் மதத்தினரின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் கோயிலுக்குச் சென்ற மக்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் காபி கொடுத்து வரும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு புதுக்கோட்டை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மக்கள் சாரை சாரையாக வந்து அம்மனை தரிசித்துச் சென்று வருகின்றனர். 

இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் அன்னதானம் நடைபெற்று வரக் கூடிய சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட சிறை முன்பு இஸ்லாமிய மக்கள் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக 8-வது ஆண்டாக கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர்ப்பந்தல் அமைத்து நீர் மோர் காபி கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அவர்களது பணத்தை பங்கிட்டு செலவழித்து ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும் இந்து முஸ்லிம் மதத்தினர் சகோதரத்துவத்துடன் பழகி வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் திருவப்பூர் கோயில் திருவிழா அன்று எந்த ஊரில் இருந்தாலும் இங்கு வந்து கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர்ப்பந்தல் அமைத்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தருவதாகவும் இதுபோல் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தண்ணீர்ப்பந்தல் அமைத்து இருந்த இஸ்லாமிய மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *