HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 48

பாலின சமத்துவமும் பெண் பணியாளர் பாதுகாப்பும்

நாம் ஏற்கனவே பணியிடத்தில் பெண் பணியாளர் பாதுகாப்பது மற்றும் அரண் பற்றி சிலவற்றைப் பேசியுள்ளோம். அதைத்தாண்டி பணியிடத்தில் பெண் பாதுகாப்பு ஏன் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பது பற்றி இங்கு காண்போம். ஓரிடத்தில் நான்கு பேருக்கு மேல் ஒன்று கூடினாலே சில பிரச்சனைகள், கருத்து முரண், மற்றும் முட்டல் மோதல் ஏற்படத்தான் செய்யும். அவரவர் புரிதலைப் பொறுத்து சற்று குறைவாகவோ அல்லது தூக்கலாகவோ இருக்கும். இதுவே எதிர் பாலினம் சேரும் போது அதன் வீரியம் இன்னும் அதிகமாக இருக்கும். அடிப்படையில் பெண் பாலினம் நமக்கு எதிரி எனும் பிம்பத்தால் உருவான சிக்கல் இது. ஆண்களின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறப்படும் கருத்தே தவறானது அது மறைமுகமாக பெண்களை அடிமைப்படுத்தும் செயல்தான். ஆணினம் சாதிக்கப் பிறந்தது பெண்ணினம் சாதனைக்கு துணை போவது என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டனர். உண்மையில் அவரவர் முன்னேற்றத்திற்கு அவரவரே பொறுப்பு. உதவி என்பது நாம் அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல நாம் பெரும் உந்துதல். மொத்தத்தில் அனைவரும் சாதிக்கப் பிறந்தவர்கள் தான் எனும் எண்ணம் இருந்தாலே போதும் யாரும் யாரையும் அடிமைப்படுத்தும் எண்ணம் ஒருபோதும் எழாது.

பாலினச் சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல, வறுமை ஒழிப்பு, நீடித்த வளர்ச்சி, நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு கருவி என்று கோபி அன்னான், ஐ.நா வின் முன்னாள் பொதுச்செயலாளர் கூறுகிறார். ஆம், இந்த பாலினச் சமுத்துவத்தை இப்போது அனைவரும் முழுமையாக உள்வாங்கி செயல்படுத்தும் காலகட்டமாக உள்ளது. ஒரே வேலையில் ஈடுபடும் ஆணுக்கு வேறு ஊதியம், பெண்ணுக்கு வேறு ஊதியம் எனும் நிலை மாறிவருகிறது. மாறிவரும் இச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு பணியிடத்தில் இன்றும் சற்று கேள்விக்குறியாக உள்ளது. ஆண்களுக்கு மட்டும் முழுமையான பாதுகாப்பு இருக்கிறதா? எனும் கேள்வி எழும் அதே நேரத்தில், ஆண்களுக்கான பணியிட அச்சுறுத்தல் மனதளவில் சென்றுவிடும் அதை எளிதில் ஆற்றக்கூடிய சூழல் வந்துவிடும். ஆனால், பெண்களுக்கு அப்படியல்ல, மனதளவிலும், உடலளவிலும் ஏற்படுகிறது. பாலியல் சீண்டல் மூலம் பலவித இன்னல்களுக்கும், சமூக அவலங்களுக்கும் தள்ளப்படும் சூழ்நிலை இருப்பதால் அவர்களது பாதுகாப்பில் சற்று அதிகக் கவனம் தேவைப்படுகிறது. இது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிற ஒன்று. முன்னர் மன்னர்கள் படையெடுத்துச் செல்லும்போது அவர்கள் கவர்வது பொன், பெண், மண் தான். ஏன் இந்தப் பெண், அவர்களால்தான் அந்த இனம் விருத்தி அடையும். சில நேரங்களில் பெண்களை முதலில் வெட்டிக் கொலைசெய்வதும் உண்டு. ஒரு ஊரில் அல்லது நாட்டில், ஆயிரம் ஆண்களை விட ஆயிரம் பெண்கள் இருந்தால் போதும் அவர்களது இனத்தை எளிதில் பெருகச் செய்யமுடியும். ஆதலால்தான் அவர்களை குலவிளக்கு என்றெல்லாம் போற்றிப் பாதுகாக்கும் நடைமுறை உண்டு. வீட்டைத்தாண்டி அவர்களுக்கான மதிப்பும், உயர்வும் குறைவுதான். அப்படியே சிலர் அந்தத் தடைகளைத் தாண்டி வந்து சாதித்த போது அவர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். அப்படிப்பட்ட இன்னல்கள் இன்றைய காலகட்டங்களில் குறைவு என்றாலும், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. அதை சரிசெய்ய பல்வேறு நடைமுறைகள் இப்போது வந்துள்ளன. அது பெண்களுக்கு ஒரு கேடயமாக இருக்கிறது, ஆனால் அதுவே சில பழிவாங்கும் செயலுக்கு பயன்படுத்தப் படும்போது கேள்விக்கும் கேலிக்கும் உரியதாகி விடுகிறது.

நான் தற்போது வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் பாதிக்குப் பாதி பெண்கள் தான் உள்ளனர். இது ஒரு மிகப்பெரும் சாதனையாக எல்லாரும் பேச ஆரம்பித்து உள்ளனர். இது தொடர்பான சிக்கல்களையும் முறையாகக் கையாண்டு வருகிறோம். நான் பொறுப்பேற்ற பிறகு இதுவரை எவ்வித பாலியல் துன்புறுத்தலும் எனது நிறுவனத்தில் நடந்ததில்லை. இப்பாதுகாப்பை உறுதி செய்ததின் அடிப்படையில் தான் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. பணியில் சேரும் போது, ஊதியத்தைத் தாண்டி பெண்கள் கேட்கும் முதல் கேள்வி, அவர்களுக்கான பாதுகாப்பு பற்றிதான். அதை நிறுவனத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் சொல்வதை விட, பணியில் இருக்கும் சக பெண் ஊழியர்கள் சொல்வதில்தான் அவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும். சமூக முடிவுகளுக்கே தன்னை பழக்கப்படுத்திக் கொண்ட பெண்ணினம் தன் முடிவுகளுக்கு மாறும் போது அதை ஏற்கும் மனநிலை இங்கு பலருக்கு இல்லை என்பதே பாலின சமத்துவமின்மையைக் காட்டுகிறது. பன்னெடுங்காலமாக அடக்கியும், ஒடுக்கியும், ஒதுக்கியும் வைக்கப்பட்ட பெண்ணினம் சம உரிமையைக் கேட்டு கையில் எடுக்கும் போது பல்வேறு சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

நிறுவனங்களில் பெண் ஊழியரிடம் வரைமுறை தாண்டி கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் தொல்லைகளே அவை பாலியல் தீண்டலுக்குள் வரும். குறிப்பாக நேர்காணலில் சில கேள்விகள் குறிவைக்கப்பட்டு கேட்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதுண்டு. அவற்றை தவிர்த்து மேன்மை காப்பது நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை, HRக்கு முழுக்கடமை உண்டு. பெண்களின் மீதான அக்கறை என்ற பெயரில் பல தொல்லைகள் தரப்படும் சூழலும் இன்று மாறிவருகிறது, கல்விதான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு நடைமுறைகள் இருந்தாலும் அதை திறம்பட செயல்படுத்தி மற்றும் நடைமுறைப்படுத்தி சம உரிமையை நிலைநாட்டும் பொறுப்பில் மனிதவளத்துறை பங்களிப்பு அதிகம்.

முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்விதத் தடைகளும் தடை போடுவதில்லை, அவர்கள் நடை தளர்வதும் இல்லை.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  1. Jesu Kumar M S says:

    Thank you for the Article Dr.

  2. DANIEL RAJANYAGAM says:

    Nice

  3. SUSI BELINA MARY says:

    நடைமுறை உண்மை. அறிவுறுத்தல் ஆலோசனை அருமையான பதிவு