மணமக்களுக்கு விறகடுப்பு,  வறட்டியை தந்து, கேஸ் விலை உயர்வை கேலி செய்த நண்பர்கள்

கடலூரில் கேஸ் விலை உயர்வு எதிரொலி. பட்டதாரி மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி,விறகு அன்பளிப்பு அளித்து அசத்திய நண்பர்கள்.  மகளிர் தினத்தில் மணமகளுக்கு அளித்த இந்த அன்பளிப்பால்  சுவாரசியம்.

கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சார்ந்த பொறியியல் பட்டதாரி நயீம் என்ற மணமகனுக்கும் சென்னை ராயப்பேட்டை பகுதியை சார்ந்த முஸ்கான் என்ற எம் பி ஏ பட்டதாரி மணமகளுக்கும் இன்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. உறவினர்கள் நண்பர்கள் என சுற்றமும் சூழ ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த சுப நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

இதில் மணமகன் நயீமின் நண்பர்கள் மணமகளுக்கு அளித்த பரிசு பொருட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சுவாரசியத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்படும் இன்று  நடைபெறும் திருமண வரவேற்பு விழா என்பதாலும் தற்போது கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து பெரும் உச்சத்தை அடைந்துள்ளதை சுட்டிக்காட்டும் வகையிலும் பட்டதாரி மணமகளுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை கண்ணை கவரும் விதத்தில் அலங்கரித்து அன்பளிப்பாக நண்பர்கள் அளித்தனர். 

நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க மேடையிலேயே அன்பளிப்பை திறந்து பார்த்த பட்டதாரி மணமக்கள் இந்த பாரம்பரிய பழமையான பொருட்களைக் கண்டு வியப்படைந்தார். நண்பர்களின் இந்த குறும்புத்தனமான, குடும்ப பாங்கான பாரம்பரிய அத்தியாவசிய பொருட்களை கொண்ட அன்பளிப்பு மணமக்களை மட்டுமின்றி  சுப நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்து  சுவாரசியத்தை ஏற்படுத்தியது. 

வெங்காயம் விலை ஏற்றத்தின் போது வெங்காயம், பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது பெட்ரோல் என ஏற்கனவே இந்த மணமகனின் குடும்பத்தார் நிகழ்ச்சியில் நண்பர்கள் வழங்கி அனைவரும் கவனத்தையும் ஈர்த்த இவர்கள் தற்போது கேஸ் விலை ஏற்றத்தை குறிப்பிட்டு மண் அடுப்பு, சாணி வரட்டி, விறகு என அன்பளிப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *