பராமரிப்பு இல்லாத அரசு பள்ளியைப் பார்த்து கடுப்பான உணவுத்துறை அமைச்சர்…!

பழனி அருகே சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்  பள்ளியில் பராமரிப்பு இல்லாததால் ஆசிரியர்களை கடிந்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. அர்ப்பணிப்புடன் பள்ளியில் பணியாற்ற வேண்டும்  என அறிவுரை வழங்கினார்.

பழனி அருகே உள்ள சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா, புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி திறப்பு விழா மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில்  உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

சத்திரப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர்  சக்கரபாணி பள்ளியை பார்வையிட்டு , ஆய்வு செய்தார். அப்போது பள்ளி கட்டிடங்கள், மைதானம் உள்ளிட்டவை முறையாக பராமரிக்காமலும், சேதமடைந்தும் காணப்பட்டது. மேலும் பள்ளியில் மாணவர்கள் குறைவான எண்ணிகையில் இருந்ததை பார்த்து அமைச்சர் சக்கரபாணி ஆசிரியர்களை அழைத்து கடிந்து கொண்டார்.  

அனைத்து ஆசிரியர்களையும் கன்னியாகுமாரி போன்ற தூரத்தில்  உள்ள மாவட்டத்திற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் அமைச்சர் தெரிவித்தார். மேலும் பள்ளியில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் என அமைச்சர் சக்கரபாணி கேட்டபோது பள்ளியில் 150 மாணவர்கள் படிப்பதாக ஆசிரியர்கள்  தெரிவித்தனர் . ஆசிரியர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என அமைச்சர் கேட்டபோது 15  ஆசிரியர்கள் பணி புரிவதாக  தெரிவித்தனர். அரசு பள்ளியில் பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரா பணியாற்றுவதா? அரசு பள்ளியில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என பணியாற்ற வேண்டும். 

ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள் அப்போதுதான் மாணவர்கள் அரசு பள்ளியில் வந்து சேர்வார்கள், தனியார் பள்ளிகள் எப்படி வைத்துள்ளார்கள் அதற்கு இணையாக அரசு பள்ளி இருக்க வேண்டாமா என ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் நடைபெறக்கூடிய பொது தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும், அடுத்த முறை வரும்போது பள்ளி முழுமையாக மாறி இருக்க வேண்டும். மைதானம் முழுவதும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அமைச்சர் கொடுத்த டோஸ் காரணமாக பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *