கோவில் பிரச்சனையால் அன்னதான பொருட்களை சாலையில் கொட்டி மறியல் செய்த மக்கள்…!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பட்டவைய்யனார் கோயிலில் சாமி கும்பிடுவதில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அதிகாரிகள் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி மற்றொரு தரப்பை சேர்ந்த மக்கள் இன்று அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகளை சாலையில் கொட்டி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த  பட்டவைய்யனார் மற்றும் கொம்புக்கார சுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது இருந்தே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா கொண்டாடுவதில் கோயில் உரிமைக்காரர்களான ஒரே சமூகத்தைச் சேர்ந்த  தானான், சின்னத்தானான்  வகையறாக்களுக்கும் சிவந்தான்,ஏகான் வகையறாக்களுக்கும் பிரச்சனை நிலவி வந்தது.

இதன்பின்பு ஆலங்குடி வட்டாட்சியர் தலைமையில்  இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இனிமேல் அக்கோயிலின் திருவிழாவை இரு தரப்பினரும் சேர்ந்து நடத்த வேண்டும் எனவும் ஒரு தரப்புக்கு தெரியாமல் ஒரு தரப்பினர் கோயிலில் விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே இன்று ஒரு தரப்பைச் சேர்ந்த சிவந்தான் மற்றும் ஏகான் வகையறாக்கள் அக்கோயிலில் பால்குடம் மற்றும் அன்னதான விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதற்கு மற்றொரு தரப்பான தானான் மற்றும் சின்னத்தானான் வகையறாக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இது குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் நள்ளிரவு முதலில் அங்க குவிக்கப்பட்ட போலீசார் ஒரு தரப்பினர் மட்டும் திருவிழா நடத்த முடியாது என அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிவந்தான் மற்றும் ஏகான் வகையராவைச் சேர்ந்தவர்கள் இன்று கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் இன்று அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகள் அதேபோல பால்குடம் எடுப்பதற்காக கொண்டு வந்த பால் உள்ளிட்ட அவற்றை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் சமரசம் பேச்சு வார்த்தை போலீசார் ஈடுபட்டும். அதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்காததால் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.தொடர்ந்து கீரமங்கலம் பட்டவையா கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *