அகில இந்திய தலித் தலைவராக திருமாவளவன் முயற்சியா?

கர்நாடகா சட்டசபை தேர்தலில் விசிக போட்டியிடக் கூடும் என செய்திகள் வெளியாகிருந்த நிலையில், ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அம்மாநில தலைமை அலுவலகத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார். 

தேசிய கட்சிகளாக மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ள நிலையில், சில மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னர் செல்வாக்கு செலுத்தியது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமது திரிணாமுல் காங்கிரஸை அகில இந்திய கட்சியாக உருமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, கோவா மற்றும் பல வடக்கு மற்றும் வடகிழக்கு மாநில தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் களத்தில் இருந்து வருகிறது.

இதே பார்முலாவை ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் பின்பற்றி வருகிறது. அகில இந்திய அளவில்  இசுலாமிய அரசியல் தலைவர்  தேவை என்ற கருத்தில் ஓவைசியும் பல மாநில தேர்தல்களில் களமிறங்கி போட்டியிடுகிறார். மஜ்லிஸ் கட்சி பீகாரில் பெற்ற பெரும்பான்மை வாக்கும், வெற்றியும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனாலும் அதன் பின்னர் ஓவைசி கட்சியால் தெலுங்கானாவை தவிர பிற மாநிலங்களில் கோலோச்ச முடியாத நிலைதான் இருந்தது.

தற்போது இதே பார்முலாவை தமிழ்நாட்டின் விடுதலை சிறுத்தைகள் கட்சி கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக வட தமிழ்நாட்டில் கணிசமான செல்வாக்கு கொண்ட தலித் கட்சியாக விசிக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் விசிக தனது செல்வாக்கை அதிகரிக்கும் வகையில், ஆந்திரா மாநிலத்துக்கு தொடர்ந்து பயணம் மேற்கொண்டார் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

ஏற்கனவே, கர்நாடகா மாநிலத்தில்  தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் விசிக தனது ஆதரவை அதிகரித்து வந்த நிலையில், கர்நாடகாவில் விரைவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் விசிகவும் போட்டியிடக் கூடும் எனவும் கூறப்பட்டது. அதே நேரத்தில் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் முதல்வர் சித்தராமையாவை அண்மையில் திருமாவளவன் நேரில் சந்தித்தார். இருவருக்குமான சந்திப்பு கர்நாடகா தேர்தல் தொடர்பானதுதான் என திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்தார்.

தற்போது ஆந்திரா மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தை விஜயவாடாவில் திருமாவளவன் திறந்து வைத்துள்ளார். விஜயவாடாவில் விசிக தலைமை அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஆந்திர மாநிலத்துக்கான விசிகவின் காலண்டரையும் திருமாவளவன் வெளியிட்டார். ஆந்திராவில் குண்டூர், மதனப்பள்ளி, பாப்பட்லா ஆகிய இடங்களில் ஏற்கனவே விசிக அலுவலகங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நடைபெறப் போகும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய அளவிலான தலித் தலைவர் மாயாவதிக்கு பின், எந்த கட்சியும் அகில இந்திய தலித் கட்சியாக உருவெடுக்கவில்லை. இந்த இடத்தை நிரப்ப திருமாவளவன் திட்டமிட்டிருக்கலாம் என்பதே அரசியல் வட்டாரங்களில் நிலவும் கருத்து.

-இராகவேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *