HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 46

பணியிடத்து பாதுகாப்பும், அறமும்.

எந்த ஓர் இடத்திற்கு நாம் சென்றாலும் அதற்கான சம்பளம் மற்றும் இன்ன பிற சலுகைகளைத் தாண்டி, அங்கு நமக்கான பாதுகாப்பு என்ன என்பதை நோக்கித்தான் நம் அடுத்த கேள்வி நகரும். எங்கோ நாம் குடும்பத்தோடு உல்லாசப் பயணம் செய்கிறோம், அப்படிச் செல்லும் போது சொகுசு, வசதி இவையெல்லாம் தேவையென்றாலும் முதலில் நாம் நாடுவது அங்கு நமக்கான பாதுகாப்புதான். மனித இனம் ஆண்டாண்டு காலம் தொட்டு வேட்டையாடித் திரிந்து விலங்குகள் மற்றும் கொள்ளையர்களிடம் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவன் எடுக்கும் முயற்சிகள் பற்பல. இப்போது நாகரிகம் அடைந்த சமூகத்தில் நாம் இருக்கிறோம். ஆனாலும் பாதுகாப்பின் தன்மை காலத்திற்கு காலம் மாறக்கூடிய ஒன்று. மக்கள் என்பது ஒரு நாட்டின் மதிப்புமிகு சொத்து, அவர்கள் சேர்ந்து வாழும் நிலைக்கு சமூகம் எனப் பெயரிட்டு அழைக்கிறோம். அந்த சமூகத்தில் ஒருசில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் அதன்மூலம் பாதுகாப்பற்ற சூழலை அந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டோர் உணரக்கூடும். அவற்றை சரிசெய்ய சட்டரீதியான பாதுகாப்பைத் தருவது நம்மை ஆளும் அரசின் கடமை. அதுபோலத்தான் ஒரு நிறுவனத்தில் இருக்கக்கூடிய பதவியின் அடிப்படையிலோ அல்லது வேலையின் அடிப்படையிலோ மேலும் ஏதோசில அற்ப காரணங்களுக்காக பழிவாங்கல் கூட நடைபெறும் அவற்றை நேர்செய்து முறையான மற்றும் பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க வேண்டியது மனித வளத்துறையின் கடமை.

சென்றவராத் தொடரைப் படித்துவிட்டு, ஏகப்பட்ட கேள்விகள், சில நகையாடல்கள் இருந்தன. இதெல்லாம் இருந்தால்தான் நம் எழுத்து ஏதோ செய்கிறது எனும் எண்ணமும் பெரு உவகையும் எழுத்தாளருக்கு வரும். வேலைபார்க்கும் இடத்தில் எப்போது பெண்கள் வேலைக்குச் சேர ஆரம்பித்தார்களோ அப்போதே காதலும் அங்கு முளைவிட ஆரம்பித்தது ஆனால் அதற்காக அவற்றை ஒதுக்க வேண்டும் என்பதல்ல, அந்த சூழலுக்குப் பக்குவப்பட்டு வேலை பார்க்கும் இடத்தில் நம் முதல் கவனம் வேலையின் மீது மட்டுமே இருந்தால் நல்லது எனும் தன் கருத்தை எனது கட்டுரையை ஒன்றுவிடாமல் படித்து ஊக்கம்தரும் திரு.நாராயணன் அவர்கள் பகிர்ந்திருந்தார். மிக்க நன்றி.

பணியிடத்தில் பலதரப்பட்ட எண்ண அலைகள் கொண்டவர்கள் இருப்பார்கள், ஒருவரை நமக்குப் பிடிக்கும் அவருக்கு நம்மைப் பிடிக்காமல் இருக்கலாம் அல்லது நமக்குப் பிடிக்காதவரோடு நமக்குப் பிடித்த ஒருவர் பிடிப்போடு பேசும் நிலைகண்டு நமக்கு சற்று கடுப்பேறும், இதுவே எதிர் பாலினம் என்றால் கடுப்போடு சேர்ந்து கொந்தளிப்பும் ஏற்படும். இது ஒரு மிகப்பெரிய பேசுபொருளாகக் கூட நிறுவனங்களில் சிலநேரம் மாறிவிடும். சில நேரங்களில் எல்லைதாண்டி, நிறுவனத்தின் வேலையில் சுணக்கம் ஏற்படும் நிலைகூட ஏற்பட்டுவிடும் ஆதலால் அதன் கொதிநிலை அறிந்து சரிசெய்து அமைதிப்படுத்துவது எளிதான செயல் அல்ல. பணியிடத்தில் காதல் வயப்படுத்தல் தவறென்று நாம் சொல்லவில்லை ஆனால் அது ஓட்டுமொத்த பேசுபொருளாக மாறிவிடக்கூடாது என்பதுதான் முக்கியம். பல நிறுவனங்களில் கணவன் மனைவி இருவரையும் ஒருசேர வேலைக்கு எடுப்பதில்லை, அதே நேரத்தில் வேலை செய்யும் இடத்தில் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டால் அவர்களை பிரித்து வைப்பதும் இல்லை. சரி, கணவன் மனைவியை ஒரே இடத்தில் வேலைக்கு  எடுத்தால் என்ன தவறு? ஒட்டுமொத்தப் பார்வையில் பார்க்கும்போது சரிப்பட்டு வராது என்பது எல்லாருக்கும் தெரியும். விட்டுவிட்டு வந்த வீட்டு சிக்கல்கள் கூட அலுவலகத்திற்கு வந்த பிறகும் விட்டுவிடாமல் தொடரும், அது பலருக்கு நெருடல்களை ஏற்படுத்தும். ஆதலால் அதை தவிர்ப்பதுண்டு. பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது ஏதோ HRன் கடமை என ஒதுங்காமல் அது எல்லாருடைய கடமை என எடுத்துச் செய்யும்போது பாதுகாப்பு நிலைநிறுத்தப் படும்.

எல்லா இடத்திலும் பெண்களுக்கான பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை இருக்கிறது, ஆண்களுக்கு இல்லையா? எனும் கேள்வியை பலர் முன் வைப்பதுண்டு. உடலளவில் அதிகளவு பாதிப்பு பெண்களுக்குத்தான் என்பதால் அவர்களின் பாதுகாப்பு முதன்மையானதாக பார்க்கப்படும். பணியிடத்தில் எல்லைமீறி காட்டும் நட்பானது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். அது பாலியல் சீண்டலில் கூட முடிய வாய்ப்புண்டு. பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒவ்வொரு நிறுவனமும் சில கோட்பாடுகளை உருவாக்கி செயல்படுத்தும். அதற்கென சில குழுக்கள் இயங்கும். சட்டரீதியான மேலும் கட்டாயமாக இருக்கவேண்டிய குழுக்களில் POSH (Prevention of Sexual Harassment Committee) எனும் குழுவும் உண்டு, இதில் நிறுவனத்தைத் தாண்டி பொதுநிலையில் இருந்து இயங்கக்கூடிய ஒருவர் உறுப்பினராக இருக்கவேண்டும், HR நிச்சயமாக ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும். இது முழுக்க பெண்களுக்கானது அல்ல மாறாக பிரச்சனை யாருக்கெல்லாம் ஏற்படுகிறதோ அவர்களுக்கான சரியான தீர்வை தர வேண்டியதுதான் இதன் நோக்கம். இக்குழு எல்லா பாலினத்தவருக்கும் பொதுவான ஒன்று.

பாலியல் துன்புறுத்தல்கள் மீதான கவனம் விழிப்புணர்வு தற்போது அதிகம் என்பதால், இதனால் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான சரியான அணுகுமுறையை ஏற்படுத்த வேண்டியது நிறுவன பொறுப்பாளர்களின் கடமை. இதை உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது.

பணியிடத்தில் நாம் சேர்ந்ததின் நோக்கம் நம் திறனைக் காட்டி உயர்வான இடத்திற்கு வருதல் என்பதுதான், அதை விடுத்து மற்றவற்றில் கவனம் மாறுவது வேண்டாத வேலைதான்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *