இசை நிகழ்ச்சியென ஆன்லைனில் 10 லட்சத்தை ஆட்டய போட்ட 4 இளைஞர்கள் கைது…!

உதகையில் பிரபல தனியார் திருமண மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஆன்லைனில் 2 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்று 10 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலித்து மோசடி செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் திருமணத்திற்காக உதகை கூட்செட் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை முன்பதிவு செய்திருந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் அதே தனியார் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை கடந்து சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது.

இந்த டிக்கெட் விற்பனை சம்பவம் திருமண வீட்டாருக்கு தெரிய வர அதிர்ச்சி அடைந்த அவர்கள் அது குறித்து மண்டப நிர்வாகத்திடம் முறையிட்டனர்.  ஆனால் திருமணத்திற்கு மட்டும் தான் மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இசை நிகழ்ச்சி குறித்து தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் மண்டப நிர்வாகத்தினர் தெரிவித்து மண்டபத்தின் பெயரை கூறி மோசடி சம்பவம் நடைபெறுவதை உறுதி செய்து அந்த கும்பலை பிடிக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து ஆன்லைன் டிக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மொத்தமாக 50 டிக்கெட் தேவைப்படுவதாக கூறினர். எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர்கள் பதில் அளித்து உள்ளனர். ஆனால் ஆன்லைனில் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் நேரில் வந்து டிக்கெட்டுகள் கொடுத்தால் பணத்தை கொடுத்து விடுவதாகவும் மண்டப நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர். 

இதை நம்பி நேரில் வந்த அந்த கும்பலை மண்டப நிர்வாகத்தினர் மடக்கிப் பிடித்தனர். மேலும் மண்டப நிர்வாகி சதீஷ்  இது குறித்து ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

 இந்த மோசடி சம்பவத்தில் ஊட்டியை சேர்ந்த சித்தார்த் (வயது 24), சரவணன் ரூகேஷ் பாபு (35), ஜாக்சன் (30), மோனிஷ் குமார் (20), ஆகிய 4 பேர் ஈடுபட்டதும் தலா 500 ரூபாய் என டிக்கெட் ஆன்லைனில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு விற்று பணம் பெற்றுள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  இதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *