யூனிபார்ம் கேட்டு, முக்காடு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட  அரசுப் பேருந்து ஓட்டுநர்…!

தேனியில் சீருடைக்கான தையல் கூலி வழங்கக்கோரி உடலில் புதிய துணியை போர்த்திக்கொண்டு போக்குவரத்து கழகக் கிளையில்  அறப்போராட்டத்தில் ஈடுபட்ட  அரசுப் பேருந்து ஓட்டுநர்.  

 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர்,  தேனி கிளையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் சீருடைக்கான தையல் கூலியை வழங்கக் கோரி இன்று பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனிக் கிளையில் பாலகிருஷ்ணன்   அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.‌

அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்ட தைக்காத புதிய சீருடை துணியை தனது உடலில் போர்த்திக்கொண்டு பணிமணை முன்பாக நின்று நூதன முறையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.‌ சுமார் 5மணி நேரத்திற்கு பிறகு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து கழக அதிகாரிகள் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றார். 

இது தொடர்பாக பாலகிருஷ்ணன் கூறுகையில், அரசுப் பேருந்து ஓட்டுநராக கடந்த 15ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றேன். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளிகளுக்கு போக்குவரத்து கழகத்தில் இருந்து 4செட் சீருடை மற்றும் அதற்கான தையல் கூலி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தொடர்ச்சியாக சீருடை மற்றும் தையல் கூலி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சீருடைக்கான புதிய துணியை மட்டும் வழங்கி விட்டு அதற்கான தையல் கூலியை போக்குவரத்து கழகம் வழங்குவதில்லை.‌ இந்த நிலை மதுரை மண்டலத்தில் உள்ள திண்டுக்கல் கோட்டத்தில் மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. பிற மண்டலங்களில் எல்லாம் சரியாக தையல் கூலி வழங்கப்பட்டு வருகின்றன.  

அரசு சார்பில் வழங்கப்படும் தையல் கூலியை வழங்கக்கோரி சீருடை அணியாமல் மாற்று உடையில் பணிபுரிந்து வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன்.‌ இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.‌ எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முறையாக வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *