HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 45

காதலெனும் தேர்வெழுதி

வேலை செய்யுற இடத்துல, போனமா, வேலைய பாத்தோமா, வந்தோமான்னு இருக்கணும், தேவையில்லாத பிரச்சனைகள கொண்டுவந்தா அவ்வளவுதான், என்று சொல்வதை பல வீடுகளில் நாம் பொதுவாகக் கேட்டிருப்போம். இங்கு சொல்லப்படும் தேவையில்லாத பிரச்சனை என்று மறைமுகமாக குறிப்பிடப்படுவது காதல் வயப்படுதலைத் தான். இது குற்றமா? மனிதப் பார்வையில் இது குற்றம்தான், ஆனால் இயற்கையின் பார்வையில் இது பொதுவானது, ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். மனிதப் பார்வையில் தவறாகத் தெரிவதற்கு பல காரணங்கள் உள்ளது அதைப்பற்றிப் பேசினால் பக்கங்கள் பத்தாது. வேலையைக் காதலி உன்னை பலர் காதலிக்க ஆரம்பிப்பார்கள் என்று ஒரு பஞ்ச் டயலாக்கை ஒரு நிறுவனத்தின் பயிற்சி நேரத்தில் என் HR நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். சார், ஒரே ஒருத்தர் நம்மள காதலிக்கிறதையே இங்க (நிறுவனத்தில்) ஏத்துக்கிறது கிடையாது, இதுல பல பேர் நம்மள காதலிக்க ஆரம்பிச்சா என்ன ஆகுறது எனும் உடனடிப் பதிலைக் கண்டு கொஞ்சம் திகில் அடைந்தாராம். இதெல்லாம் இருக்கட்டும், மொத்தத்துல, வேலைபாக்குற இடத்தில் காதல் வயப்படுதல் சரியா? தவறா? தவறுதான் எனும் பொதுவான பதில் வரும். பணியிடத்தில் காதல் கீதல் என அலைந்தால், எதிலுமே பிடிமானம் இல்லாமல் போகும், சிலநேரங்களில் மானமே போகும் இது நம் பணியிட முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும். ஆதலால் கூடவே கூடாது என ஒரு மூடுதிரை போட்டு மறைப்பதை விட, அதைப்பற்றிய ஒரு புரிதலுக்குள் பயணப்படுவோம் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம். ஏனென்றால் இதுபற்றி நிறைய சிக்கல்கள் (பஞ்சாயத்துகள்) HRரிடம் வருவதுண்டு.

காதலால் பல பேருடைய கரியர் (வேலை) காணாமல் போயுள்ளது இதுல இந்த மாதிரிலாம் பேசுறது நல்லதல்ல என ஒதுங்கிப் போவதை விட, தெரிந்து பக்குவப்படுவது எவ்வளவோ மேல். வயிறு இருப்பதினால்தானே பசி எடுக்கிறது, ஆதலால் வயிறை வெட்டியெடுத்து விடுவோம் எனும் முடிவெடுக்க முடியுமா? முடியாதல்லவா. சிக்கலின் தன்மையை உணர்ந்து அதை சரிசெய்ய முயலுவதே நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் காதல் வயப்பட்டு சிக்கலான சூழல்களுக்கு ஆளானோரை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நிறுவனங்களில் ஆற்றுப்படுத்துனர் இருப்பதுண்டு (Counselling) இந்தக் ஆற்றுப்படுத்தும் வேலையை பல நேரங்களில் மனித வளத்துறையில் உள்ளவர்கள் செய்வதுண்டு. அப்படி ஒருமுறை நான் முன்பு வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில், வேறு வேறு துறையில் இருந்தவர்கள் காதல் வயப்பட்டு அடிக்கடி cafeteria செல்வதும் வெளியில் செல்வதுமாக இருந்ததைக் கண்டு அந்தத் துறையின் தலைவர் பொங்கியெழுந்து விட்டார், என்னிடம் வந்து இவர்களது செயலால் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் பிரச்சனை அதிகமாகிறது என் துறையில் உள்ள பலரும் பெருங்குறையாக பேச ஆரம்பித்து விட்டனர் சீக்கிரம் ஒரு முடிவை எடுங்கள், யாரோ ஒருவரையாவது பணியில் இருந்து விலக்குங்கள் எனும் அன்புக் கட்டளை போட்டார். அவர் பேசுவதில் இருந்த நியாயத்தை உணர்ந்தேன், உடனே அவ்விருவரையும் அழைத்து முறையாகப் பேசி இந்தச் சிக்கலின் தன்மையை உணர வைத்தேன், வேலையில் சரியாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். பிறகு சில மாதங்கள் கழித்து இருவரும் வெவ்வேறு நிறுவனத்தில் சேர்ந்து திருமணமாகி தற்போது நல்ல நிலையில் உள்ளனர். திருமணத்திற்கு என்னை அழைத்திருந்தனர், அவர்களது துறையின் தலைவரை அழைக்க நான் இருமுறை வற்புறுத்தியும் அவர்கள் மறுத்து விட்டனர்.

நமது நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 68% பணியாளர்கள் தங்களது வாழ்க்கைத் துணையை தாங்கள் வேலை பார்க்கும் இடத்திலேயே தேர்ந்தெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர். 40% பேர் பணியாளருடன் டேட்டிங் செய்வது தவறில்லை என்றும், 70% பேர் பணியிடத்தில் ஏற்படும் காதலால் எங்களது வேலைத்திறன் மேம்படுகிறது எனும் கருத்தையும் பதிவு செய்துள்ளனர். இந்தக் கணக்கெடுப்பு மென்பொருள் (IT) நிறுவனங்களில் வேலை பார்ப்போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, ஆதலால் இது பிற நிறுவனங்களுக்கு முழுதும் பொருந்தாது, ITயில் பணிச்சூழல் என்பது சற்று மாறுபட்டது. ஆன்மிகமும், காதலும் அவரவர் புரிதலுக்கு விட்டுவிட வேண்டும் எனும் பொதுக்கருத்து உண்டு, இதை வரவேற்பது ஒருபுறம் இருந்தாலும், இதனால் ஏற்படும் பிரச்னைகள் அவர்களுக்கு உள்ளாகவே இருந்துவிட்டால் ஒன்றுமில்லை, ஆனால் பொதுவெளியில் வந்து சில விரும்பத்தகாத பிரச்சனைகளை உண்டுபண்ணும் போது அது அனைவருக்குமான பிரச்சனையாக மாறிவிடும், ஆதலால் கவனம் வேண்டும்.

பனியிடத்தில் மலர்கள் காதல் கொள்வது எப்படி இயற்கையோ அதுபோல பணியிடத்தில் ஒருவர் இன்னொருவர் மீது காதல் கொள்வதும் இயற்கைதான்.

மலர் பனியிடத்தில் கொள்ளும் காதல் பொதுவான மற்றும் இயற்கை கொள்கையின் அடிப்படையில் ஏற்படுவது, அதற்கு யாரும் மறுப்பு சொல்வதில்லை. ஆனால் பணியிடத்தில் ஏற்படும் காதல் இருவருக்கும் ஏற்ற சரியான பொதுவான கருத்தில் அமைந்தால் ஏற்றுக்கொள்ளலாம், அது இல்லாமல் ஏதோ சில உள்நோக்கம் கொண்டு, தங்களது சில மறைக்கப்பட்ட தேவைக்காக எனும் போது அது சிக்கலுக்குள் தள்ளிவிடும். இதுபோன்ற நேரத்தில் இவை பெரும் பிரச்னையாகி HRரிடத்தில் வரும், அதை பொறுமையோடு அணுகி சரிசெய்யும் பக்குவம் மனித வளத்துறையில் உள்ளவர்களுக்கு இருக்க வேண்டும். சிலநேரங்களில் இந்த ஹார்மோன் செய்யும் கலகத்தையும் குறிப்பிட்ட நபர் (யார் பிரச்சனை செய்கிறார்களோ) செய்யும் கலகத்தையும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய கலகமே ஏற்பட்டு நமக்கு (HR) களங்கம் ஏற்படும் சூழல் கூட உருவாகும்.

தற்போதுள்ள பணியிடச் சூழல் உறவுகள் மலர்வதற்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது, அதே நேரத்தில் அந்த உறவுகளில் விரிசலையும் ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. பிறரிடத்தில் பழகும் வாய்ப்பு எல்லை மீறும்போது அல்லது எல்லை தாண்டும் போது சில கசப்பான நிகழ்வுகள் நடப்பதுண்டு. இதன்பொருட்டு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நிறுவனங்களில் நடப்பதுண்டு, அதை சரிசெய்து நெறிப்படுத்துவதில் HRன் பங்கு என்ன என்பதை அடுத்த வரம் பார்ப்போம்.

காதெலெனும் தேர்வு எழுதுங்கள் அந்தத் தேர்வில் உங்களுக்குத் தெரிந்த, புரிந்த உங்களுக்கான பதிலை மட்டுமே எழுதுங்கள், மற்றவரை மாயம் செய்கிறேன் என நினைத்து எதையாவது எழுதி உங்களையும் உங்களை நம்பி வருகிறவரையும் குழப்ப வேண்டாம்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. ரெஜினா சந்திரா says:

    காதலர் தின வாரத்திற்கேற்ற topic. நீங்கள் HR ஆக இருந்து காதலர்களைச் சேர்த்து வைத்தது சிறப்பு.

  2. சு சுசிலா says:

    காதல் இல்லை என்றால் உலகத்தில் இயக்கம் என்பது இல்லை. வேலை செய்யும் இடத்தில் காதல் வராமல் தடுக்க முடியுமா?. பட்டுக்கோட்டையார் ஒரு பாடலில் ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது. இதில் ஆணும் பெண்ணும் சேரா விட்டால் அழகிருக்காது என்று பாடுவார். சேர்ந்து வேலை செய்யும் இடத்தில் காதல் வராமல் இருக்குமா என்னங்க நீங்க