பள்ளி மாணவிக்கு தொல்லையை கண்டித்ததால்  பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள் கைது 

மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெருவில் மண்பானை தொழிலாளியான சரவணக்குமார் குடும்பமும் மருதுபாண்டி என்பவரின் குடும்பமும் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எதிரெதிர் வீட்டில் வசித்துள்ளனர்.

அப்போது சரவணக்குமாரின் 15 வயது மகளுக்கு, மருதுபாண்டியின் மகனான மணிரத்னம் (23) என்பவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மணிரத்தினத்தை சரவணகுமார் ஆரம்பத்திலேயே கண்டித்துள்ளார். ஆனால், மணிரத்தினத்தின் தொந்தரவு தொடரவே காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் சரவணக்குமார்.

அதன்பின்னர், சரவணகுமார்  குடும்பத்துடன் வீட்டை காலி செய்து சின்னக்கண்மாய் பகுதிக்கு குடிபெயர்ந்து சென்றார்.

 மணிரத்னம் திருட்டு, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்துள்ளார். 

இந்த சூழலில், பழைய குற்ற வழக்குகளுக்காக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதனை தொடர்ந்து, மது போதை தலைக்கேறவே நண்பர்களுடன் வடிவேலன் தெருவுக்கு வந்து பழைய ஆத்திரத்தில் சரவணக்குமாரின் வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டை வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக வாசலில் அப்போது யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய தெப்பக்குளம் போலீஸார், 3 மணி நேரத்திற்குள்ளாக மணிரத்னம் மற்றும் அவரது நண்பர் பார்த்தசாரதி (22) ஆகிய இருவரை கைது செய்த நிலையில் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *