மதிய உணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம். எம்எல்ஏ அதிரடி…!

அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை திமுக எம்எல்ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பள்ளியில் உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுடன் திரண்டதால் பரபரப்பு 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரட்டூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மொத்தம் 157  குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் இன்று பள்ளிக்கு வருகை தந்த 132 மாணவர்களுக்கு மதியம் சத்துணவு திட்டத்தின் கீழ் பருப்பு சாதம் வழங்கப்பட்டுள்ளது.

அப்போது எட்டாம் வகுப்பு படிக்கும் தீபிகா என்ற மாணவியின் உணவு தட்டில் பல்லிகிடந்துள்ளது.  உடனே அருகில் இருந்த சக மாணவி பாரதியிடமும் பள்ளி கிடப்பதை காண்பித்துள்ளார்.இது குறித்து அங்கிருந்த சத்துணவு பணியாளர் வள்ளியம்மாள் மற்றும் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். உடனே பல்லி விழுந்த உணவை சாப்பிட வேண்டாம் என மாணவர்களிடம் கூறி மற்ற மாணவர்களிடம் தெரிவித்து அந்த சாப்பாடு அனைத்தையும் கீழே கொட்டச் சொல்லி உள்ளனர். ஆனால் அதற்குள் சில மாணவர்கள் சாப்பிட்டு விட்டதாக தெரிகிறது.

 இந்நிலையில் மாலை வீட்டுக்கு திரும்பிய தீபிகா மற்றும் பாரதிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனை பார்த்த அவர்களின்‌ பெற்றோர்கள் பதறி அடுத்த படி குழந்தைகளிடம் விசாரித்த போது பள்ளியில் சாப்பிடும் போது உணவில் பல்லி விழுந்ததை தெரிவித்துள்ளனர், தொடர்ந்து அவர்கள் இருவரையும் அருகில் உள்ள அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

 தொடர்ந்து பல்லி விழுந்த  தகவல் மற்ற பெற்றோர்களின் கவனத்திற்கும் சென்றதை அடுத்து அனைத்து பெற்றோர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கரட்டூர், நாடார் காலனி, தம்மங் கரடு, கரட்டூர் மேடு, தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள்   35- க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறி அந்தியூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 இதனை அடுத்து உணவு சாப்பிட்ட மற்ற அனைத்து  குழந்தைகளின் பெற்றோர்களும் (132) அருகில் உள்ள அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையம், அந்திய அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர், அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு எந்த ஒரு தொந்தரவு இல்லை என தெரிவித்தனர்,‌ இருப்பினும் சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை கண்காணிப்பில் வைத்திருந்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர்.

இதற்கிடையே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளிடம் நலம் விசாரித்தார் தொடர்ந்து மருத்துவர்களிடம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பெற்றோர்கள் அலட்சியமாக செயல்பட்ட சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தெரிவித்த அந்தியூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விஸ்வேஸ்வரன் குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பயப்படும் அளவிற்கு எந்த ஒரு தொந்தரவும் குழந்தைகளுக்கு இல்லை என தெரிவித்தார். சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *