குடிநீர் குளத்தில் இறந்து கிடந்த காட்டெருமையின் வயிற்றில் 4 மாத சிசு… கிராம மக்கள் வேதனை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமணியங்குறிச்சியில் மலையாண்டி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள பாறைகுளம் ஊரணியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து தான் கஞ்சாநாயக்கன்பட்டி, கருமலை, கண்னூத்து, மாங்கனாபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி மக்களின் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக மக்கள் இந்த குடிநீரை பயன்படுத்தி வரும் நிலையில் இன்று காலை இந்த ஊரணியில் சுமார் 7 வயதுடைய காட்டெருமை இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்தது. அதிலிருந்து கடும் துர்நாற்றமும் வீசியது இதனால் மிகுந்த வேதனைக்கு ஆளான மக்கள் இது தொடர்பாக துவரங்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனதுறையினர் வந்து கிராம மக்களின் உதவியுடன் இறந்து கிடந்த காட்டெருமையை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து கால்நடைமருத்துவர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்தபோது அதன் வயிற்றில் 4 மாத ஆண் காட்டெருமை சிசு இருந்தது. பின் அருகில் உள்ள காட்டில் காட்டெருமை குட்டியுடன் புதைக்கப்பட்டது. ஊரணிக்கு அருகில் உள்ள குயவன்மலை பகுதியில் இருந்து இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதற்காக வந்தபோது காட்டெருமைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
10 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த குளத்தில் காட்டெருமை விழுந்து இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதுடன் குளத்தில் இனி தண்ணீர் எடுக்க முடியாத நிலை மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குளத்தில் உள்ள நீரை முழுவதுமாக வெளியேற்றும் தூர் வாருவதுடன் குளத்தை சுற்றிலும் வேலி அமைத்து குடிநீரை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.