ஆக்கிரமித்த கட்டடத்தை இடிக்க விடாமல் பாஜக நபர் பெட்ரோல் குண்டுடன் அராஜகம்…!

தேனியில் பாஜக பிரமுகர் ஆக்கிரமித்து கட்டிய  வீடு கடையை இடித்த அதிகாரிகள் , எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பாக்கெட்டுடன் வாக்குவாதம் செய்த பாஜக குடும்பத்தினரால் பரபரப்பு.

தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட ஒண்டிவீரன் நகரில் வசிக்கும் சின்ன சுருளி என்பவர் தனது வீட்டிற்கு உள்ள பாதையை அங்குள்ள சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட நகராட்சிக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் இன்று ஒண்டிவீரன் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினருடன் இணைந்து, காவல்துறையினர் பாதுகாப்புடன் தேனி – அல்லிநகரம் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இதற்கு அங்கிருந்த ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்  நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் தேனி மாவட்ட பாஜக ஓ.பி.சி.அணி துணைத் தலைவராக உள்ள போஸ் என்பவர் தனக்கு கால அவகாசம் வழங்குமாறு கேட்டார். 

ஆனால் அதிகாரிகள தரப்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றுமாறு அறிவித்ததாகவும் தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்க இயலாது எனக் கூறினர். அதனை ஏற்க மறுத்த போஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் ஆக்கிரமிப்பு குடியிருப்பு மற்றும் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அவர்களது எதிர்ப்பை மீறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் நகராட்சியினர் ஈடுபட்டதால் போலின் மனைவி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக கூறி எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவரது மகன் பெட்ரோல் பாக்கெட்டுடன் வீட்டின் முன் அமர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர்களுடன் தேனி மாவட்ட பாஜகவினர் மற்றும் நகராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அங்கிருந்து போஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்று விட்டனர். இதையடுத்து அவரது வீடு மற்றும் கடைகளில் இருந்த பொருட்களை எடுத்து நகராட்சி பணியாளர்கள் மூலம் சாலையில் வைத்து விட்டு ஜேசிபி வாகனத்தை கொண்டு ஆக்கிரமிப்பு பகுதியை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *