HR உன்ன கூப்பிடுறார்: தொடர் 41

அரசியல் சுவைப்போம்           

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். “அரசியல் சுவைப்போம்” எனும் இத்தலைப்பை எழுதலாமா? வேண்டாமா? என பலமுறை யோசித்துதான் எழுத ஆரம்பித்தேன், சிறு அடி சறுக்கினாலும் அல்லது ஓரிரு எழுத்து பிசகினாலும் வேறுமாதிரி பார்க்கப்படும், பல்வேறு வண்ணங்கள் என்மீது பூசப்படும். இருந்தாலும் இதை எழுதுவதை ஒரு சவாலாக எடுத்து செய்வோம் என மனதை திடமாக்கி எழுதுகிறேன். “கார்ப்பரேட் அரசியல் ரொம்ப மோசம்பா” எனும் பேச்சினை பல இடங்களில் நாம் கேட்டிருப்போம். அப்படி என்ன அது மோசம். அதற்கு முன், முதலில் அரசியல் என்றால் என்ன? அது எதை மையப்படுத்தியது என்பதை பார்த்துவிட்டு வருவோமா.? அரசியல் என்பது ஒரு தேன்கூடு. போகிறபோக்கில் அதை பார்த்துவிட்டு அப்படியே நகர்ந்து செல்பவர்கள் உண்டு. அதைப் பார்க்காமலே இருப்பவர்களும் உண்டு. அது என்னதான் என அருகில் போய் பார்ப்பவர்களும் உண்டு. சற்று அசைத்துப் பார்த்து தேனீக்கள் விரட்ட ஆரம்பித்ததும் ஓட்டம் பிடிப்பவர்களும் உண்டு. என்ன ஆனாலும் பரவாயில்லை தேனீக்கள் தரும் சில கொட்டுகளை வாங்கி, அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு அந்தத் தேனை எடுத்து ரசித்து ருசிப்பவர்களும் உண்டு. அந்தத் தேனை தனக்கு மட்டுமல்லாது பிறருக்கும் கொடுப்பவர்களும் உண்டு. தான் உண்டது போக அல்லது தான் உண்ணாமலே அதை காசாக்க சந்தையில் விற்பவர்களும் உண்டு. இதில் நாம் எந்த வகை என்பதை நாம் தான் இனம் காண வேண்டும். மொத்தத்தில் தேன்கூடு என்பது ஒருமித்த எண்ணத்தோடு கட்டமைத்து வைக்கப்பட்டுள்ள சமூக அமைப்பு அவ்வளவுதான்.

“அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்” என்று புரட்சியாளர் மா சே துங் கூறுகிறார். ஓட்டுபோடுவது மட்டும்தான் எனக்குத் தெரிந்த அரசியல் என விலகியிருப்போருபோரால் பேராபத்து உண்டு. கீழ்காணும் மூன்று படிநிலைகளை நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். இதைத் தெரிந்து நான் என்ன செய்யப்போகிறேன்? இதனால் எனக்கென்ன பயன் என்று நீங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தாலே அது ஓர் அரசியல் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நமக்கான உரிமையை, தேவையை வென்றெடுக்கும் களம்தான் தான் அரசியல். நாம் விரும்புகிறமோ இல்லையோ, அதைச் சுற்றிதான், நாமும் நம் சமூக அமைப்பும் சுழன்றாக வேண்டும்.

மூன்று நிலைகள்

  • அரசியல் புரிதல் – அரசியல் பற்றிய அடிப்படைப் புரிதல் இருப்பது அவசியம், இது தெரிந்தால் தான் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, அதன் பாதிப்பு என்ன என்பதை உணர முடியும். உணரும் நிலை மட்டும்தான் இவை.
  • அரசியல் தெளிவு – இந்தத் தெளிவு நிலை இருந்தால் தான், நமக்கு ஆதரவாக மற்றும் எதிராக நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றமுடியும் இதன்மூலம் நம்மையும் இச்சமூகத்தையும் மாற்றமுடியும். இந்த நிலையோடு நிற்பவர்கள் அதிகம்.
  • அரசியல் சார்பு – ஒரு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதன் சார்பு நிலை எடுத்து சமூகக் கனவுகளை நிறைவேற்ற களம் காண்பவர்கள் உண்டு. அதோடு தன் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பினையும் உருவாக்கிக் கொள்பவர்களும் உண்டு.

ஏன் அரசியலை நோக்கி அதிகப் பார்வை, ஏனெனில் அது அதிகாரம் நிறைந்த இடம், அந்த அதிகாரத் துணைகொண்டு நாம் நினைப்பதை எளிதில் சாதிக்க முடியும். அளவு கடந்த அதிகாரம் மிக மிக ஆபத்தானது, அதே நேரத்தில் அதிகாரம் இல்லாத பதவி பரிதாபத்திற்கு உரியது. இதெல்லாம் எதற்கு இங்கே. இது அப்படியே நிறுவனங்களுக்கும் பொருந்தும். அரசியலில் யார் நம் எதிரி என்பது தெளிவாகத் தெரியும். கார்ப்பரேட்டில் (நிறுவனங்களில் எனும் பொருளில் எடுத்துக் கொள்ளவும்) யார் நம் எதிரி என்பது புரியாத புதிராகவே இருக்கும். நிறுவனங்களில் உயர் நிலையில் இருப்போர் தங்களின் நிலைப்பாட்டை கண்மூடித்தனமாய் பிறரை நம்ப வைப்பதுண்டு, அதைத்தாண்டி, அதற்கான விவாதம், அறிதல், தெரிதல், புரிதல் இந்த நிலைகளைக் கடந்து செல்வதுதான் முழுமையான மற்றும் நிரந்தர வெற்றியைத் தரும். இப்படியே போய்க்கொண்டிருந்தால் அவசர முடிவுகளை எடுப்பது எப்படி? இந்தப் படி நிலைகள் முறையாக இருக்குமாயின் அவசர நிலைக்கு உதவ உயர் நிலையில் இருப்போருக்கு தோள் கொடுக்க அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் தானாகவே முன் வருவார்கள்.

அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் வழிமுறைகளை வரையறுக்கும் ஒரு கட்டமைப்பாகும், வேறுபட்ட சிந்தனைகள் மாறுபட்ட எண்ணங்களை ஒருங்கிணைத்து ஓர் ஒழுங்கியலை ஏற்படுத்த உதவுவதுதான் அரசியல். இந்த அடிப்படைப் புரிதல் இருந்தாலே இதன்மேல் இருக்கும் வெறுப்பு விலகிவிடும். அரசியல் என்பது பொருளாதாரம், சமூகம், மனித மேம்பாடு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆனால் இதையெல்லாம் மடைமாற்ற அவரவர் தேவைக்காக, வசதிக்காக மாற்றியும், தூற்றியும், ஏற்றியும் பேசும் நிலைதான் அரசியல் என்றாகிவிட்டது. இது நிறுவனங்களில் நடக்கும் போது, இதை மிக மிகக் கவனமுடன் கையாள வேண்டும். அவன்கிட்ட எதுவும் வச்சுக்காத அவனுக்கு பெரிய பின்புலம் இருக்கு எனும் சொல்லும்போதே அங்கு அரசியல் சித்து விளையாட்டு உள்ளது என்பதை அறிக.

ஒரு பிரச்சினை நடக்கும்போது அதைப்பற்றிய விசயம் தெரிந்தவர்கள் பேசாமல் இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தோ, அதைவிடவும் பெரிய ஆபத்து விசயம் தெரியாதவர்கள் பேசுவது, ஆனால் இந்த இரண்டாவது ரகம்தான் அதிகம் இப்போது தென்படுகிறது. தன் சுய விருப்பத்திற்காக எடுக்கும் சில முடிவுகள் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் அது சார்ந்த பலரது வாழ்க்கையையும் முடக்கிவிடும் மற்றும் பாழாக்கிவிடும் அப்படி எடுக்கப்பட்ட முடிவுகளை நியாயப்படுத்த அவர்கள் படாத பாடு படவேண்டியிருக்கும், அதற்கு சிலபல அரசியல் செய்வதுண்டு. மொத்தத்தில் politics (அரசியல்) என்பது poly tricks என்றாகிவிட்டது பெருங்கொடுமைதான்.

அரசியல் எனும் தேன்கூட்டை நீங்களே சிலநேரம் அசைத்துப் பார்க்க முற்படுங்கள், வேறு யாராவது அசைத்து விட்டால் தேனீக்களிடம் கொட்டு வாங்குவது மட்டுமே நம் வேலையாக இருக்கும். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள், எப்பக்கமும் இல்லாமல் நான் பொது எனும் நிலையை எடுப்பதை முடிந்தளவு தள்ளிப்போடுங்கள், ஏதாவது ஒன்றை நீங்கள் ஏற்றுதான் ஆகவேண்டும். அந்த ஏற்கும் நிலை கண்முடித்தனமானதா? சார்பு நிலை சார்ந்ததா? அல்லது தெளிவு நிலை சார்ந்ததா? என்பதை வைத்துதான் நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள். அரசியல் தீயதா? தூயதா? என்பதைத் தாண்டி அது என்றுமே புதியது. ஆம் அந்தப் புதியதை நம் மனதில் பதியவைப்போம். இல்லையென்றால் நாம் அலைக்கழிப்படுவது நிச்சயம்.

அரசியல் தெளிவு என்பது வேறு, அரசியல் சார்பு என்பது வேறு. தெளிவு நிலை அனைவருக்கும் வேண்டும். அந்தத் தெளிவு நிலை வெகு சிலரால் அரசியல் சார்பு நிலையாகப் பார்க்கப்படுவது நல்லதல்ல.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *