களைக்கட்டும் வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு; காளைகள், காளையர்கள் உற்சாகம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வன்னியன்விடுதியில் தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் 15 லட்சம் ரூபாய் செலவில் மேடையுடன் கூடிய நிரந்தர வாடிவாசல் அமைக்கப்பட்டு அந்த வாடிவாசலை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்த நிலையில் வன்னியன்விடுதியில் சித்தி விநாயகர், மாயன் பெருமாள் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 63ம் ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

தமிழகத்திலேயே அதிக வாடிவாசலையும் அதிகப்படியான ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது.‌ அதன்படி இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 8ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி தொடங்கியது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரக்கூடிய நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்கள் பகுதிக்கு நிரந்தர‌ வாடிவாசல் அமைக்க வேண்டும் என்று ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.‌

இந்த கோரிக்கையை ஏற்று ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர வாடிவாசல் உடன் கூடிய அமைக்கப்பட்டது.‌ இந்த நிரந்தர வாடிவாசலுடன் கூடிய மேடை தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை இன்று காலையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஜல்லிக்கட்டு பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் அந்த வாடிவாசல் இருக்கும் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடு பணிகளும்‌ முழுமையாக செய்யப்பட்டு காளைகள் வெயிலில் நிற்காத வண்ணம் வாடி வாசலுக்கு காளைகளை கொண்டு வரக்கூடிய பகுதியில் மேற்கூறையும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வன்னியன்விடுதியில் சித்தி விநாயகர், மாயன் பெருமாள் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 63ம் ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8-15 மணிக்கு புதிய வாடிவாசலில் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதற்கு முன்னதாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் அதிகாரிகள் பார்வையாளர்கள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 700 காளைகள் களமிறக்கப்பட்டது. 270 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் ஒரு சுற்று இருக்கு 25 வீரர்கள் என களம் இறக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு உரிய ஜல்லிக்கட்டு விதிமுறைகளை கடைபிடித்தும் நடைபெற்று வருகிறது.

மேலும் புதிய வாடிவாசலிலிருந்து துள்ளிக்குதித்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் மல்லுக் கட்டி திமிலை தழுவி வருகின்றனர். இந்த ஜல்லிகட்டில் சிறந்த முறையில் காளையை அடக்கும் காளையர்களுக்கும் சிறந்த முறையில் களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், நாற்காலி, பீரோல், மின்விசிறிகள், காட்பாக்ஸ், சில்வர் பாத்திரங்கள்‌ உள்ளிட்ட பரிசு பொருட்களும் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் சிறந்த முறையில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும் சிறந்த முறையில் வாடி வாசலில் களமாடும் காளையிற்கும் ஹீரோ இருசக்கர மோட்டார் வாகனம் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்த ஜல்லிக்கட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சுகாதார துறையினர் வருவாய் துறையினர், கால்நடைபராமரிப்புத் துறையினர்‌, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டனத்திற்கு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *