சூப்பர்: 46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு…

ஜனவரி 6ஆம் தேதி தொடங்கவுள்ள 46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் இந்த ஆண்டு திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புத்தக வாசகர்களுக்கு திருப்திகரமான கண்காட்சியாக இது அமையும் – பபாசி செயலாளர் முருகன்

தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக 46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியானது நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. 

18 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க நாளான ஜனவரி 6ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். இந்த புத்தக கண்காட்சியானது நாள்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.  மொத்தம் 800க்கும் மேல் அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தக வாசகர்களுக்காக இந்த முறை கடந்த ஆண்டு காட்டிலும் சிறப்பாக இந்த புத்தக கண்காட்சியானது நடைபெற உள்ளது.

புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவான ஜனவரி 6ஆம் தேதி 2023 ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.

1500 அரங்குகள் இதுவரை வந்துள்ளதாகவும், இடவசதி குறைவாக உள்ளதால் 800அரங்குகள் அமைக்கப்படுவதோடு, மினி ரேக் சிஸ்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பபாசி செயலாளர் முருகன் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக வாசகர்களுக்கு ஏற்றவாறு திருப்தியாக இந்த புத்தக கண்காட்சி இருக்கும் என்றார்.

தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழக அரசு அறிவுறுத்தல்படி வாசகர்கள் பாதுகாப்பு கருதி கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்ற அவர், கண்காட்சியின் போது ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கான சிறப்பு போட்டிகள் உள்ளிட்டவை குறித்து அடுத்த சில நாட்களில் விரிவாக அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுத்திட்டமான புத்தக பூங்காவிற்கு தமிழக அரசு இடம் கொடுத்தால் அடுத்த புத்தகக் கண்காட்சியை சிறப்பான முறையில் அங்கு நடத்த திட்டமிடுவதாகவும் கூறிய அவர், புத்தகப் பூங்கா அமைக்க இடம் தர வேண்டி தமிழ்நாடு அரசிற்கு இந்த நேரத்தில் கோரிக்கை வைப்பதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *