சிப்காட் தொழிற்பேட்டை வரவே வராது, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் – அமைச்சர் சு.முத்துசாமி 

பவானிசாகர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை- அமைச்சர் சு.முத்துசாமி விளக்கம். தவறான தகவல்களை பரப்பி விவசாயிகளை சிலர்  தூண்டி விடுவதாக  குற்றச்சாட்டு. கீழ்பவானி கால்வாய் உடைப்பை சீரமைக்கும் பணியை முடித்து   பாசனத்திற்காக சனிக்கிழமை (நாளை மறுதினம்) தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு என்ற இடத்தில் கீழ்பவானி பிரதான கால்வாயில் கடந்த பத்தாம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடைப்பை சீரமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில், பணிகள் அனைத்தும் நாளை மாலைக்குள் முடிக்கப்பட்டு சனிக்கிழமை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என கூறினார்.

மேலும்,  மூன்று நாட்களுக்குள் கடைமடை பகுதியை தண்ணீர் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், தேவைப்பட்டால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலான நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் என்றார். 

 தொடர்ந்து, பவானிசாகர் அருகே 1080 ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கப்படுவதாக கூறி விவசாயிகள் போராட்டம் அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பவானிசாகர் அருகே சிப்காட் அமைக்கும் எந்த அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை என்றும், அதுபோல் தொழிற்பேட்டை அமைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.  

ஆனால் சிலர் விவசாயிகளை தூண்டிவிட்டு இதுபோன்று தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி குற்றம் சாட்டினார்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *