வெரும் 2000 ரூபாய் தகராறில், 25 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நபர்…! 

ரூபாய்  இரண்டாயிரம் தகராறில் அண்ணன், தம்பியை மது பாட்டிலால் குத்திய சமையல் தொழிலாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

திருச்செந்தூர் அருகே வடக்கு ஆத்தூர் தைக்கா தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர். இவரது மகன்கள் ரகுமத்துல்லா(45), கலீல்ரகுமான்(42). இவர்கள் இருவரும் சமையல் தொழில் செய்து வருகின்றனர். அதேபகுதி மேலத்தெருவை சேர்ந்த சேக்அப்துல் காதர் மகன் ஹமீது (47). இவரும், சமையல் தொழிலாளி. கடந்த 2012-ம் ஆண்டு ஹமீது வேலைக்கு வருவதாக கூறி ரகுமத்துல்லா, கலீல்ரகுமான் ஆகியோரிடம் ரூ.2 ஆயிரம் அட்வான்ஸ் தொகை வாங்கினார். 

ஆனால் சொன்னபடி வேலைக்கு வரவில்லை. இது தொடர்பாக கடந்த 26.10.2012 அன்று ஆத்தூரில் வைத்து அண்ணன், தம்பி இருவரும் ஹமீதுவிடம் அட்வான்ஸ் பணத்தை திரும்ப கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த ஹமீது, தான் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து ரகுமத்துல்லாவின் தலை மற்றும் வயிற்றில் குத்தினார். இதனை தடுக்க வந்த கலீல்ரகுமானுக்கு கழுத்தில் குத்தியுள்ளார். 

மேலும் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹமீதுவை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்செந்தூர் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி வஷித்குமார் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு கூறினார். 

இதில் கொலை முயற்சிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதம் என மொத்தம் ஹமீதுக்கு 25 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் பாரிகண்ணன் ஆஜரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *