HR உன்னகூப்பிடுறார்: தொடர்36

உயர்வுக்கான ஒரே வழி

ஒரே நாளில் ஒபாமா ஆகும் ஆசை பெரும்பாலும் எல்லோருக்கும் வந்திருக்கும். அது இயல்பு தான். அடைய முடியா ஒன்றை தான் மனம் சில நேரங்களில் அசை போட்டுக் கொண்டே இருக்கும். அல்லது அதை அடைந்தவர்களைப் பற்றி பெருமை பேசும், இப்படி இந்த அலைபாயும் மனதை நெறிப்படுத்தி நம் வழிக்குக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இந்த அலைபாயும் மனநிலை கொண்ட பலர் நிறுவனங்களில் இருப்பதுண்டு. அதையெல்லாம் அந்தந்த துறை சார்ந்தவர்களே சில சமயங்களில் சரி செய்து விடுவதுண்டு, மிதமிஞ்சியவர்களை மனிதவளத்துறை பக்கம்  அனுப்பிவிடுவதுண்டு. அப்படி வந்தவர்களிடம் நாம் பேச ஆரம்பித்தால் எக்கச்சக்க எபிசோடுகள் (தொடர்கள்) எடுக்கலாம் அந்த அளவிற்கு நீண்டு போகும் வாய்ப்பு அதிகம்.

நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் இப்படி ஒருநபர் இருந்தார், எட்ட முடியா ஆசையை இலக்காக வைத்திருப்பர் ஆனால் அதை அடைய எந்த சிறுமுயற்சியும் எடுப்பதில்லை, இது நாளடைவில் முத்திப் போய் schizophrenia எனும் மனச்சிதைவு நோய்க்கு அவரைத் தள்ளிவிட்டது. பிறகு அவருக்கு முறையான வழிகாட்டல் தந்து அதிலிருந்து அவரை மீட்டு, புதுமனிதனாக மட்டும் அல்லாது தன் முயற்சியில் நம்பிக்கை வைத்து மேலெழுந்தவராக மாற்றியது எனக்கு ஒரு பெரும் மனமகிழ்வைத் தந்தது. அது ஒருபுறம் இருந்தாலும், அதில் இருக்கும் உண்மைத்தன்மை மற்றும் அடிப்படைத் தேவை மற்றும் புரிதலை உணர்ந்தறிய வேண்டியது HRன் தவிர்க்க இயலாக டமை. இந்த சிக்கலை எப்படி சரி செய்வது என்பதற்கு முன் இந்த சிக்கலுக்கான காரணிகள் என்ன? முதல் காரணம், தன் தகுதிக்கு அல்லது எல்லைக்கு மீறிய எதிர்பார்ப்பு. அப்படித் தகுதியும், திறனும் இருக்கும் பட்சத்தில் அதை செயல்படுத்த அல்லது கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் காட்டும் ஒருசார்பு நிலை(favouritism).

முதல் காரணத்தை சரி செய்யும் வாய்ப்புகள் அதிகம், ஆனால் இந்த இரண்டாவது காரணத்தை சரி செய்வதென்பது சற்று கடினம் தான். தன் விருப்புக்குரிய ஒருவருக்கு அல்லது பலருக்கு முறையற்ற வகையில் நன்மைகளை வழங்கி, ஒருதலைப்பட்சமாக, ஒரு சார்பு நிலையோடு இருப்பதென்பது முற்றும் தவிர்க்க வேண்டிய ஒன்று. அப்படியானால் முதல் வாய்ப்புத் தேடி வரும் அல்லது இந்த வேலையை இவருக்கு கொடுப்பதால் அவரது வாழ்வு நல்ல நிலைக்கு ஏற்றம் பெறும் எனும் நிலை இருக்கும் போது…எனும் கேள்வி வரலாம். இந்த நிலை என்பது ஒருசார்பு அல்ல மாறாக நாம் தரும் வாய்ப்பு மற்றும் கரிசனம் எனும் அடிப்படையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறுவனங்களில் இந்த ஒருசார்பு நிலை என்பது அறவே இருக்காதா? இல்லையென்று சொல்ல முடியாது. இது தவிக்க இயலா ஒன்று ஆனால் அதே நேரத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அப்படியே ஒருவர் ஒருசார்பு நிலையோடு செயல்படும் போது அவரைப் பற்றிய பிம்பம் எதிர்மறையாக உருவாகி அவருக்கே சிக்கல் தரும் நிலை ஒருநாள் ஏற்படும். நம் தனிப்பட்ட வாழ்விலும் இந்த ஒருசார்பு நிலை இல்லாது வாழ நாம் உறுதியெடுப்பது நலம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் “இது சிறகுகளின் நேரம்” எனும் நூலில்  இதைப் பற்றி சிறப்பாக விளக்கியிருப்பார்.

விண்கலனை(Rocket/Shuttle) விண்ணை நோக்கி அனுப்ப எரிகலன் (Fuel Tank) மிக மிக அவசியம். அந்த எரிகலனின் துணையோடு தான் அதுபோக வேண்டிய இலக்கு நோக்கிப் பயணிக்க முடியும், துணையாக இருந்த அதே எரிகலன் தான் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடந்து புவியீர்ப்பு விசையை எட்டியதும் விண்கலனில் இருந்து கழட்டிவிடப்படும். அடடா துணையாக இருந்து அதன் பயணத்துக்கு உறுதுணையாக இருந்த இந்த எரிகலனை கழட்டிவிடுவது எப்படி நியாயமாகும் என நாம் கேட்கலாம். கழட்டிவிடவில்லை எனில் அந்த விண்கலம் அந்த புவியீர்ப்பு விசையைத்தாண்டிப் பயணிக்க முடியாது. எது உதவியாக இருந்ததோ அதுவே இடைஞ்சலாக மாறிடும் சூழல் உருவாகும். அது போலத்தான், நமக்குள் இருக்கும், கோபம், பொறாமை, ஒருசார்பு போன்ற குணங்கள் எல்லாம் எந்த அளவிற்குத் தேவையோ அந்த அளவிற்கு மட்டும் அல்லது அந்த அளவிற்குள் அதை கையாண்டு பயன்படுத்திட நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பார். இது எல்லோருக்கும் எல்லா நிலையிலும் பொருந்தும்.

எது எப்படி இருப்பினும், யாவற்றையும் நாம் நேர்கொண்ட பார்வையோடு பார்க்க, நெறிகொண்ட பார்வையோடு அணுக முயற்சி எடுப்பது எல்லா உயிர்களுக்கும் நலம் தரும், நமக்குகூடுதல் சுகம் தரும்.

வருத்தம் என்பது இரண்டே வடிவம்தான். நினைத்தது நடக்கவில்லை என்று சிலர்,நடந்ததையே நினைத்து சிலர்.நடப்பதில் கவனம் வைப்போம். வாழ்வாங்கு வாழ்வோம்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறைஉயர்மேலாளர்.

*கட்டுரையாளர்தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *