HR உன்ன கூப்பிடுறார்… (31)

தொடர்புகள் நம்மை மேம்படுத்தட்டும் : The Netwoking.

ஒரு பொழுதும் துன்பமாய் மாறாத ஒன்று உண்டு, அது நமது நற்செயல் மட்டுமே. அடடா கேட்பதற்கே நன்றாக இருக்கிறதா? செயலில் காண்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும் தானே? அறன் வலியுறுத்தல் எனும் அதிகாரத்தில், இக்கருத்தை வலியுறுத்துகிறார் நம் திருவள்ளுவர். பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான் – அன்னை தெரசா. இதுவும் நன்றாக உள்ளதல்லவா? சரி, எதற்காக இவையெல்லாம் இங்கே? இவையனைத்தும் நமது நட்பு வட்டத்தை மேம்படுத்த அரணாக நிற்க வேண்டிய அறன் சார்ந்த கருத்துகள். நாம் எதையும் தனித்துச் செய்ய முடியாது, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சிலரது ஒத்துழைப்பும், உறுதுணையும் இருந்தால் தான் அது சாத்தியமாகும்.

காலையில் எழுந்ததும் பல் துலக்க நாம் எடுக்கும் பற்பசைக்குப் பின் எத்தனையோ பேரின் உழைப்பும், உறுதுணையும் இருக்கத்தானே செய்கிறது. ஆதலால் தான் சொல்கிறேன், நம் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒன்றோடு தொடர்பு உள்ளதாகத்தான் இருக்கும். தனித்து இயங்கும் ஆற்றலே நமக்கு இல்லையா? நமது எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் மட்டும் தான், நமக்கு உரித்தானது, அதைச் செயலாக மாற்ற எண்ணற்ற பேரின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த ஒத்துழைப்பிற்கு நமக்குத் தேவை Network என்று அழைக்கப்படும் தொடர்புகள். அவனுக்குத் தெரியாத ஆட்களே கிடையாது என நாம் ஒருவரைப் பார்த்து மெச்சுவது அவரிடம் உள்ள அசாத்திய தொடர்புகளை வைத்துத்தான். இது யாரோ தனிப்பட்டவருக்கு மட்டும் இயற்கை வாரி வழங்கியதல்ல, இது அவரவரின் தனித்தன்மை மற்றும் அணுகுமுறையின் அடிப்படையில் உருவாக்கி பெருக்கிக்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும். அப்படியானால் இது எனக்கும் சாத்தியமா? ஆமாம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது.


நானுண்டு என் வேலையுண்டு என இருக்கிறேன். எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. என்னையவிட என்ன பெருசா அவனுக்குத் தெரியும். எனக்கு இப்ப இருக்குற வளர்ச்சியே போதும். எதுக்கு கண்டவுங்ககிட்ட போயி வழுஞ்சு பேசணும். அவனவன் உயர்வு அவனவன் விதி. இத்தன பேர தெரிஞ்சு என்ன பெருசா கிழிக்கப் போறோம். இப்படியெல்லாம் உங்களுக்குத் தோணுகிறதா? இது ஒன்றும் குற்றமில்லை. இயலாமையின் வெளிப்பாடு என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். மேலே வரவேண்டும் எனும் எண்ணம் உங்களுக்குள்ளும் இருக்கிறது, உங்களை அறியாமலே நீங்கள் உங்களுக்கு போட்டிருக்கும் மனத்தடைதான். அதை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து விட்டு, சிறகு விரித்த பறவையாக பறப்போம். தொடர்புகளை மேம்படுத்த எண்ணற்ற வாய்ப்புகள் சமூக வலைத்தளங்களில் உள்ளது, அதில் எதை தேர்ந்தெடுத்தால் நல்லது? எது உங்கள் வளர்ச்சிக்கும், கொள்கைக்கும், அறன் சார்ந்த எண்ணங்களுக்கும், உங்களது மதிப்பீடுகளுக்கும் சரிப்பட்டு வருகிறதோ அதெல்லாம் நல்லதுதான்.

தொடர்புகளை மேம்படுத்த இரண்டு வழிகள் உண்டு.

  • நீங்கள் தொடர்புகளை தேடிச் செல்வது
  • தொடர்புகள் உங்களைத் தேடி வருவது

தொடர்புகளைத் தேடி நாம் செல்வதென்பது, நாம் வளர்ச்சி கட்டத்தில் உள்ளோம் என்று அர்த்தம். முயன்று உருவாக்கி அதை நம்பிக்கைக்கு உரியதாக மாற்றுவது மூலம் அது நிலைபெறும் தன்மைக்கு மாறும். இதன் மூலம் நாம் மென்மேலும் வளர்ச்சியினை அடையலாம்.

தொடர்புகள் நம்மைத்தேடி வருகிறதென்றால், நாம் உயர் நிலையில் இருக்கிறோம் என்று அர்த்தம். ஈர்ப்புள்ள காந்தம் எல்லாவற்றையும் ஈர்க்கும் என்பதற்கிணங்க, மாஸ்லோ கோட்பாட்டின் படி, தனித்த நிலைக்கு (Self Actualization) நாம் சென்று விட்டால், அனைத்தும் நம்மைத்தேடி வரும். இந்த நிலையை அடைந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இவர் எனக்கு நெருக்கம் எனச் சொல்லி நம் பெயரை கெடுக்கும் சில தொடர்புகள் நம்மோடு ஒட்டிக்கொள்ள முயற்சிக்கும். பார்த்து சூதானமாக அவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

அப்படியானால், நாம் தனித்திருக்க வேண்டுமா? இல்லையில்லை, தனித்தன்மையோடு இருந்தாலே போதும், எல்லாம் நம் வழிக்கு வரும்.

தொடர்புகளை ஏன் நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்?

  • கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஓர் அருமையான வழி
  • புதிய வாய்ப்புகளுக்கான ஒளி
  • நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை புடம்போட ஒரு வாய்ப்பு
  • நமது தகுதி (வேலைசார்ந்து) என்ன என்பதை கண்டுணரலாம்
  • கருத்து பரிமாற்றம்
  • சமூகத்தில் உயர்நிலையில் இருப்போரின் ஆதரவு
  • நமது தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்க
  • நம்மை நாமே அடுத்த நிலைக்கு மேம்படுத்த

ஒருவர் எவ்வாறு இறந்தார் என்பதை விட, எவ்வாறு வாழ்ந்தார் என்பதே சிறப்பு. அந்த சிறப்பினை அடைய நமது தொடர்பு எனும் நட்பு வட்டம் எப்படி? எவ்வாறு? இருக்க வேண்டும் எனும் தேடல் வருகிறதா? சரி, இந்தத் தொடர்புகளை எப்படியெல்லாம் மேம்படுத்தி நம்மை நிலை நிறுத்திக்கொள்வது எனும் ஆவல் உங்களுக்கு இருக்கிறதா? அதைப்பற்றி அடுத்த வாரம் பேசுவோம்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. VENNILA KAMARAJ. M says:

    மனதை கழுவி மேம்படுத்தும் ஒரு தொகுப்பு
    மிகவும் சிறப்பு ?
    தோலுரிக்கப்பட்ட உண்மைகள் எழுத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது
    வாழ்த்துக்கள் தோழர் ??

  2. சு சுசிலா says:

    அருமையான கட்டுரை.‌ஒரு கை ஓசை தராது என்பார்கள். நான் யாருடைய உதவியும் இல்லாமல் என் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தேன் என்கிறார்கள் வளர்ந்து நிற்பவர்கள். சிலரின் நேரடி முயற்சி மற்றும் பலரின் மறைமுக உழைப்பும் இல்லாமல் இருக்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.