HR உன்ன கூப்பிடுறார்… (30)

நேரம் எனும் எரியும் பனிமலை

நாம் அனைவருமே செல்வந்தர்கள்தான், நேரம் எனும் விலைமதிப்பில்லா செல்வத்தை இயற்கை எவ்விதப் பாகுபாடும் இன்றி பொதுவாகத் தந்துள்ளது, அதை பயன்படுத்தும் விதம்தான் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. நேர நிர்வாகம் என்பதை விட நேரப்பயன்பாடு என்று சொல்வதே சற்று பொருத்தமாக இருக்கும். நேரம் தன்னைத்தானே சரியாக நிர்வாகம் செய்கிறது. அது ஒரு பயணிக்கும் பேருந்து, யாரெல்லாம் ஏறி பயணிக்க முற்படுகிறார்களோ அவர்களெல்லாம் பயணிக்கலாம், அது யாருக்காகவும் நிற்காது. அது ஒரு தடையில்லா காட்டாறு, எப்படிப் பயன்படுத்துவது என்பதுதான் நமக்கான திறமை. நேரம் காலம் பார்க்காமல் நேரத்தை பயன்படுத்தும் ஆற்றல் மனிதனுக்கே உரித்தானது, மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் நேரம் மற்றும் கால ஓட்டத்தின் படி தன்னை வாழ பழக்கிக்கொண்டது. கூடு கட்டும் காக்கை பல்லாண்டு காலமாக அதே வடிவமைப்பில்தான் கூடு கட்டுகிறது. நாம் இப்போது இருப்பது 10 வது தலைமுறை ஆதலால் கால சூழலுக்கு ஏற்ப குளிர்சாதன வசதி கொண்ட கூட்டினைக் கட்டுவோம் என முடிவெடுப்பதில்லை, அப்படிக் கட்டும் ஆற்றலும் கிடையாது. ஆதலால் காலத்தை வென்றதாக மனிதன் இறுமாப்புக் கொள்ளலாம் ஆனால் இறுதியில் வெல்வதென்னவோ காலம்தான். ஆதலால் நேரம் எனும் செல்வத்தை நாம் எப்படி முறையாகக் கையாளலாம் என்பதைப்  பற்றி இங்கு காண்போம். எப்படி நாம் விலைமதிப்பில்லாப் பொருளை பயன்படுத்தாமல் பார்வைப் பொருளாக (கட்சிப் பொருளாக) வைத்திருப்போமோ அதுபோல நேரத்தையும் சிலர் விலைமதிப்பில்லா பொருள் (செல்வம்) எனக் கருதி அதைப் பயன்படுத்தாமல் அப்படியே காட்சிப்பொருளாக வைத்திருக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு, நேரத்தை நேர்த்தியாகப் பயன்படுத்த இதோ சில குறிப்புகள்.

நேரம் என்பது எரியும் எரிமலையா? உருகும் பனி மலையா? அல்லது எரியும் பனிமலையா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை கொஞ்சம் ஓரமாக உட்கார வைத்துவிட்டு, நம்மைப்  படுத்தி எடுக்கும் நேரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தி மேலே வரலாம் என்பதில் கவனம் காண்போம். நேரத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி வேலை செய்தாலும், அலைபாயும் மனதாலும் உள்ளக்களைப்பாலும் சோர்ந்து போகும் நிலை நம்மில் பலருக்கு இருக்கும். உடலும் , மனமும் சேர்ந்து ஒரு வேலையைச் செய்தால் சோர்ந்து போகும் நிலை வராது என பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். அது சாத்தியமா? சாத்தியம்தான். நம்மால் முடியாது எனத்  புறந்தள்ளுவதை யாரோ? எங்கோ? ஒருவர் செய்து முடிக்கிறார் அல்லவா! அவரால் முடியும் போது, நம்மால் ஏன் முடியாது? எனும் ஓர் உந்துதல் தன்மை திடமாய் இருக்கும் போது நம் செயல்திறன் உயர்ந்து, குறிப்பிட்ட நேரத்தில் நாம் ஏற்றுக்கொண்ட செயலை முழுமையாகச் செய்து முடிக்க இயலும்.

நாம் ஏற்ற செயலை போற்றும் படி மாற்ற பல வழிமுறைகள் மற்றும் நுட்பங்கள் உள்ளது, அவற்றுள் சிலவற்றை இங்கு அலசுவோம், இவை எண்ணற்றோருக்கு பயனுள்ளதாய் இருந்து பல மாற்றங்களை தந்துள்ளது ஆதலால் நமக்கும் தரும் எனும் நல்லெண்ணத்தோடு அணுகுவோம். பல வழிமுறைகள் இருந்தாலும் சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு பேசுவோம், நாம் இவற்றையெல்லாம் மேலாண்மைப் பாடத்தில் படித்திருக்கலாம், மீண்டும் இங்கு அலசிப்பார்ப்பதில் ஒரு அலாதிப் பிரியம் தானே? 

The POSEC Method

அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த Dwight Eisenhower கீழ்காணும் இந்த மாதிரியைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார், Prioritizing, Organizing, Streamlining, Economizing, and Contributing போன்ற வார்த்தைகளின் முதல் எழுத்தின் கோர்வைதான் இந்த POSEC மாதிரி. அது என்னவென்று பார்ப்போம்.

  • முன்னுரிமை (Prioritize) இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் நேர விரயத்தை தவிர்க்கலாம்.
  • வரையறுத்தல் (Organize) வெற்றிப்பாதையில் தொடர்ந்து இயங்க ஒரு சில வரையறைகளை நாம் வகுத்துக்கொள்வது கட்டாயம்.
  • ஒழுங்கமைத்தல் (Streamline) இலக்கு நோக்கிப் பயணிக்கும் போது, உங்களுக்கு விருப்பமில்லாத அதே நேரத்தில் இலக்கை அடைய தேவையான ஒன்றாக இருப்பவற்றினை ஒழுங்கமைப்பது.
  • வகைப்படுத்துதல் (Economize) உங்களுக்கு விருப்பமான ஆனால் இப்போதைக்கு தேவையில்லாதவை எவையெவை என்பதை வகைப்படுத்துதல்.
  • பங்களிப்பு (Contribute) இவற்றை எல்லாம் செய்த பிறகு கருமமே கண்ணாயினார் எனும் கூற்றுக்கு இணங்க முழுப் பங்களிப்போடு செயலில் இறங்கும் போது வெற்றி நமதாகிவிடும்.

இது சற்றேறக்குறைய மாஸ்லோ கோட்பாட்டினை உள்வாங்கி அமைக்கப்பட்ட மாதிரிதான்.

President Dwight Eisenhower – The POSEC Method

Pareto Analysis (the 80/20 rule)

Vilfredo Pareto எனும் இத்தாலிய பொருளாதார ஆய்வாளர், பெரு அங்காடி (Super Market) ஒன்றில் விற்பனையாகும் பொருட்களையும், வாடிக்கையாளர்களையும் மையப்படுத்தி நடத்திய ஆய்வின் மூலம், 80% விற்பனைப் பணம், 20% பொருட்களின் விற்பனையிலிருந்து வந்தது என்று தெரிந்து கொண்டார். அதிலிருந்து, ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். இந்த உலகத்தில், 80% விளைவுகளுக்கு, 20% செயல்களே காரணமாக இருக்கிறது எனத் தெரிந்துகொண்டார். நம்முடைய அன்றாட வாழ்வில் பொருந்தும். இவ்விதி மூலம் நாம் செய்யவேண்டிய 20% செயல்களில் முழுக்கவனம் மேற்கொண்டால், நம்மை அடித்துக்கொள்ள ஆளே இல்லையென சவால் விடலாம். மேலும் இந்த 20% கட்டாயமாக செய்ய வேண்டிய செயல்களை செய்வதின் மூலம் வெற்றிக்கனியை எளிதில் பறிக்கலாம். அந்த 20% அடிப்படை மற்றும் அவசியமான செயல்களை எப்படிக் கண்டுபிடிப்பது. அது உங்கள் கையில்தான் உள்ளது, நீங்கள் அடைய வேண்டிய இலக்கின் தன்மையைப் பொறுத்து அது மாறும்.

Eisenhower Matrix

இந்தப் படியணியை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த Dwight Eisenhower உருவாக்கினார், இது மிகவும் பயனுள்ளதாக எல்லோராலும் எளிதில் பின்பற்றக்கூடிய ஒன்றாகும். இதைப் பற்றிய விளக்கம் அவ்வளவாக நமக்குத் தேவைப்படாது. படம் பார்த்து கதை சொல்லுதல் போன்றதுதான்.

President Dwight Eisenhower – Eisenhower Matrix

The Pickle Jar Theory

Jeremy Wright உருவாக்கிய இந்தக் கோட்பாடு நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், உடனே காக்கை தண்ணீர் குடிக்கும் கதையோடு ஒப்பிட வேண்டாம், அது வேறு, இது வேறு. இங்கு காணப்படும் பெரிய கண்ணாடிக்குடுவை, பெரிய கல், சிறு கூழாங்கல் மற்றும் மணல் அனைத்தும் உருவகங்கள்தான். கண்ணாடிக்குடுவை என்பது நம் வாழ்க்கை, பெரிய கல் என்பது நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் பெரும் சிக்கல் அல்லது சவால், கூழாங்கல் என்பது நாம் சந்திக்கும் சிறு சிறு சவால்கள், மணல் என்பது நம் இலக்கு நோக்கி செல்லும் போது ஏற்படும் கவனச்சிதறல்கள் அல்லது புறந்தள்ளக்கூடிய பிரச்னைகள். இவற்றில், பெரிய சிக்கலை முதலில் தீர்க்க கவனம் செலுத்தி, தீர்வு காண்பதின் மூலம், சிறு பிரச்னைகளைத் தீர்க்க எளிதில் வழி கிடைக்கும், நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று புறந்தள்ளக்கூடிய சிக்கலுக்கு முன்னுரிமை கொடுத்துவிடக் கூடாது, அதனை கண்டு கொள்ளாமல் இருந்தால் அதுவாகவே சரியாகிவிடும் எனக் கூறுகிறார். கண்ணாடிக்குடுவையில் முதலில் பெரிய கல்லை உள்ளே போட்டதும், சிறிய கல்லினைப் போட இடம் கிடைக்கும், பிறகு இருக்கும் இடைவெளியில் மணல் தானாக போய் தங்கிவிடும். ஆனால் முதலிலேயே மணலைப் போட்டால் அது எல்லாவற்றையும் ஆக்கிரமித்து, வேறுதுவும் உள்ளே வர இடம் இல்லாமல் செய்துவிடும். இந்த உவமையை நாம் பலவற்றிற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளலாம். மொத்தத்ததில் நமக்கு ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் அதன் மூலம் நம் வாழ்வு செழிக்க வேண்டும் அவ்வளவுதான்.

Jeremy Wright – The Pickle Jar Theory

Jeremy Wright – The Pickle Jar Theory

இதன் வரிசையில், Parkinson’s law, Pomodoro Technique, Getting Things Done (GTD) Method மற்றும் Eat That Frog Technique போன்ற வழிமுறைகள் உள்ளன. இதை நீங்கள் கூகுளாண்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

பிறரை திட்டுவதற்காக நேரத்தை செலவிடாமல், நமக்கான திட்டமிடலில் நேரத்தை செலவிடும்போது, நேரம் நம்மை அரவணைத்துக்கொள்ளும், இல்லையெனில் அரவணைக்காமல் கொல்லும். நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி பலனுக்காக காத்திருப்பது ஒரு தனி சுகம்தான். அந்த சுகத்தை அனுபவிக்க நாம் தயாராவோம்.

நேரத்தின் மதிப்பைப் பற்றிய தெளிவு இருந்தால், வாழ்க்கையைப் பற்றிய தெளிவும் இருக்கும்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். .இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  1. Kumar John Krishnasamy says:

    Very useful and important information for anybody involved in any regular serious work whether it is official or otherwise.

    Thank you for reminding me of all those read through ‘Time Management’ topics and booklets long ago.

    Appreciate them (points jotted down / explained in simple format) all the points given in short and sweet form;

    I am sharing them with friends and families known to me… Thank you and welcome many more…

  2. ரெஜினா சந்திரா says:

    ஆம். வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர்கள் பலரும் நேர மேலாண்மையைச் சரியாக மேற்கொண்டவர்கள் தாம். நேர்மறை எண்ணங்களும் வெற்றிக்கு மிகவும் அவசியம்.

  3. SUSI BELINA MARY says:

    அருமை. நேரத்தினை பயன்படுத்தும் வகை, முறை மிகவும் நேர்த்தியான POSEC மூலம். நன்று.

  4. Dr. A. Arokia mary says:

    Excellent

  5. சு சுசிலா says:

    காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். மிகச் சிறந்த உண்மை. திட்டமிடல் ஒருபுறம் இருந்தாலும் மனச் சோர்வு தள்ளி வைத்து விடுகிறது. அருமையான பதிவு தோழர்

  6. Swamynathan says:

    ????? பயனுள்ள தகவல்…. அருமையான வழிகள்…..