தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – நீலமலைத்திருடன்(1958)

1958ல் வெளியான “நீலமலைத்திருடன்” தமிழின் முதல் ராபின் ஹூட் திரைப்படம் எனலாம் . இப்படத்தைத் தயாரிக்க தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பா தேவருக்கு “மலைக்கள்ளன்” திரைப்படம் தூண்டுதலாக இருந்தாலும், அந்தப்படம் கூட முழுமையான ராபின் ஹூட் வகை என சொல்லிவிட முடியாது. அன்று வெளியாகி வந்த ஆங்கில படங்களுக்கு இணையான ஆக்‌ஷன் சாகச காட்சிகளுடன், குதிரை கத்தி சண்டை என ராபின் ஹூட் படத்துக்கான காட்சி அமைப்புகளுடன் உருவான படம் என்றால் அது நீலமலைத்திருடன்தான் .

Neelamalai Thirudan - Wikipedia

தேவர் பிலிம்ஸ் படம் என்றாலே கதாநாயகன், நாயாகிகளுக்கு பெரிதாக வேலை இருக்காது. பாட்டு, நடனம் மற்றும் சண்டை போட்டால் போதும். மற்றபடி நடிக்கிற வேலையை பாம்பு, புலி, யானை, சிங்கம் மற்றும் நாய் ஆகியவை பார்த்துக்கொள்ளும் என தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஒரு நகைத்துணுக்கு பிரபலம் .

அப்படிப்பட்ட மிருகங்கள் சகிதம் ஒரு ஜனரஞ்சகமான படம் என்ற வகை மாதிரியை தேவர் பிலிம்ஸ் உருவாக்கி தந்த வெற்றிப்படம் நீலமலைத்திருடன் . தேவர் பிலிம்ஸுக்கு இது இரண்டாவது படம் என்றாலும் இது தான் அவர்களை நிலை நிறுத்திய படம் எனலாம். சந்திர லேகா படத்துக்குப்பின் இந்திக்கு போய் விட்ட ரஞ்சன் வெகுநாட்களுக்கு பிறகு தமிழில் நடிக்க தேவர் அழைத்து வந்தார். அவர் போட்ட கணக்கு வீண் போகவில்லை.

அந்த கணக்கை அவர் போட எம்.ஜி.ஆரும் ஒரு காரணம் . ஆமாம் இந்த படத்தில் நடிக்க வேண்டியவர் எம் ஜி.ஆர் தான். .. எம்.ஜி.ஆருக்கும் தேவர் அவர்களுக்கும் ஜூபிடர் பிக்சர்ஸ் காலத்திலிருந்து பழக்கம் என்பதை முந்தைய பகுதிகளில் எழுதியிருக்கிறேன் .

அப்படி நெருக்கமான நண்பர்களாக இருந்த இருவருக்கும் முதல் படமான தாய்க்குப்பின் தாரம் படப்பிடிப்பிலேயே எதிர்பாராமல் முட்டிக்கொண்டது. இதனால் அடுத்த படமாக நீலமலைத்திருடன் படத்துகுக்காக கால்ஷீட் கேட்டு தேவர் எம் ஜிஆரை சந்திக்க சென்ற போது அவர் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார். அப்போது அவர் நாடோடி மன்னன் தயாரிப்பிலிருந்ததும் ஒரு முக்கியக் காரணம் . ஆனால் தேவருக்கு வழக்கம் போலச் சட்டென கோவம் சுர்ரென ஏறிக்கொண்டது . பெரிய ஸ்டாராகிவிட்ட எம் ஜி ஆர் தன்னை மறந்துவிட்டாரே என எண்ணிய தேவர் உடனே எம்.ஜி.ஆரை காயப்படுத்த சரியான வழி மீண்டும் ரஞ்சனை தமிழ் சினிமாவுக்கு அழைத்து அவரை நாயகனாக போட்டு படம் எடுப்பதுதான் என்று எண்ணினார்.

தேவர் பற்றி அறிந்தவர்களுக்கு அவர் சுபவம் தெரியும் . அவர் உணர்ச்சியின் அடிப்படையில் முடிவெடுக்கும் முருக பக்தர் முரட்டு சித்தர். அப்படிப்பட்டவர் மும்பையிலிருந்து ரஞ்சனை மீண்டும் சென்னை வரவழைத்து நீல மலைத்திருடனில் நாயகனாக ஒப்பந்தம் செய்தார் . படத்தில் எம்.ஜி.ஆரை நினைத்து அவர் செய்த அனைத்தையும் அப்படியே எதையும் மாற்றாமல் ரஞ்சனுக்காக செய்தார் .படம் வெளியான போது அவை அனைத்துமே அப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்துவிட்டது..

குறிப்பாக படத்தின் முதல் காட்சியில் ரஞ்சன் குதிரையின் மீது ஏறியபடி பாடும் லட்சிய பாடல். “சத்தியமே லட்சியமாய் கொள்ளடா” எனும் பாடல் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த பாடலை மருதகாசி எழுத டி.எம் சவுந்தர்ராஜன் பாடியுள்ளார். படத்தை இயக்கியவர் தேவரின் சகோதரர் எம்.ஏ.திருமுகம். அவரே இப் படத்துக்கான படத்தொகுப்பும் செய்துள்ளார், வாகினி ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட நீலமலைத்திருடன் படத்தின் கதை இதுதான் .

Sathiyame Latchiyamai Song HD | Neelamalai Thirudan - YouTube

குடும்ப சொத்தை தானே அபகரிக்க நினைக்கும் பி.எஸ் வீரப்பா தன் அண்ணன் ராதாவையும் தங்கை கண்ணம்மாபாவியும் கொல்ல ஆட்களை ஏவ அவர்கள் தப்பித்து காட்டுக்குச் சென்று பின் குடும்பம் ஆளுக்கொரு திசை சென்று பிரிகிறது. பல வருடங்களுக்குப்பிறகு அண்ணன் மகன் பணக்காரர்களுடன் கொள்ளையடித்து மக்களுக்கு நல்லது செய்யும் ராபின் ஹூடா மாறுகிறான் . அவன் தான் நாயகன் ரஞ்சன். பின் ஒருபெண்ணைச்சந்தித்து காதல் வயப்படுகிறான். பிறகு அவள் வேறு யாருமல்ல தன் அத்தை மகள்தான்எனத் தெரியவந்து மிண்டும் எப்படிப் பிரிந்தவர்கள் சேர்கிறார்கள் என்பது கதை.

இந்தக் கதையை எஸ்.அய்யாப்பிள்ளை எழுத கே.வி. மகாதேவன் இசையமைக்கப் பாடல்கள் அனைத்தும் ஹிட். . தஞ்சை ராமையா தாஸ், மருதகாசி ஆகியோர் பாடல்கள் எழுதப் பிரபல பாடகர்களான டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி, எஸ்.சி.கிருஷ்ணன், ரத்னமாலா, கஸ்தூரி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

பாம்பேயைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வி.என். ரெட்டி கேமராவை கையாண்டார், சி.வி. மூர்த்தி. ஒலிப்பதிவு ஏ. கிருஷ்ணன் (வௌஹினி) மற்றும் பி.வி. கோட்டேஸ்வர ராவ் ஆகியோர் ஒலிப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *