300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த விப்ரோ நிறுவனம்

கூடுதலான வருமானத்தை பெறுவதற்காக, ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் யாருக்கும் தெரியாமல் மற்ற நிறுவனங்களுக்கு வேலை செய்தால் “மூன்லைட்டிங்” எனக் குறிப்பிடுவார்கள். இந்த முறையை சில நிறுவனங்கள் ஏற்றாலும், பல முன்னணி நிறுவனங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.

கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு இந்தியாவில் “மூன்லைட்டிங்” செய்வது அதிகமாகி விட்டது. ஐ.டி துறையில் ஒரு ஊழியர் நேர்முகத்தேர்வில் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு வந்தவுடன் “வேறு எந்த நிறுவனத்திற்கு வேலை செய்யக்கூடாது” என்று ஒப்பந்தம் செய்வது வழக்கம். கொரோனா பொதுமுடக்கத்தில் ஊழியர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு “வொர்க் ஃப்ரம் ஹோம்” என்ற முறை கொண்டுவரப்பட்டது. இதனால் இந்த மூன்லைட்டிங் முறையில் வேலை செய்வதும் அதிகமானது. இந்நிலையில் மூன்லைட்டிங் முறையில் வேலை செய்த 300 ஊழியர்களை விப்ரோ நிறுவனம் கண்டுபிடித்து பணி நீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக இன்று பேசிய விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி கூறுகையில், “விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், போட்டி நிறுவனங்களுக்கும் வேலை செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் அவ்வாறு வேலை பார்க்கும் 300 ஊழியர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அவர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளோம்” என்றார். விப்ரோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்வேறு ஐடி ஊழியர்கள் தங்கள் வேலை குறித்து கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *