அடிதூள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆர்கானிக் சுவீட்ஸ் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயற்கை முறையில் விளைவித்த சிறுதானியங்களை கொண்டு பலகாரம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பெண்கள், சிறுதானிய பலகாரங்களை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள், கொரோனாவிற்கு பிறகு சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக ஆர்டர் கிடைத்துள்ளதாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி….இது குறித்த செய்தி தொகுப்பு

உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள், அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய உணவுதான், இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாக உள்ளது.  ஆனால் மாறி வரும் உணவு கலாச்சாரத்தால் இன்றைய இளம் தலைமுறையினர், தீராத நோய்களின் பிடியில் சிக்கிக் கொண்டு தங்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளனர், ஆறுமாதக் குழந்தை முதல் அறுபது வயது பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். சிறுதானியம் என்பது வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் உள்ள சிறிய அளவிலான தானியங்கள் ஆகும்.

குறிப்பாக சிறுதானியங்கள் என்றால் கூல் கஞ்சி உள்ளிட்டவைகள் தான் இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர் ஆனால் நம் பாரம்பரியமும், பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்களும் நம் இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், சிறுதானியங்களான வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களில் இத்தலைமுறைக்கும் பிடித்த வகையில் முறுக்கு, மிக்சர், அதிரசம், காராசேவ், சீடை, லட்டு போன்ற பல்வேறு வகையான சிறுதானிய தின்பண்டங்களை தயாரித்து வருகிறது புதுக்கோட்டை கருவேப்பிலையான் கேட் அருகே உள்ள இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்.

இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தினை அதிரசம், கவுனி அதிரசம், தினை மிக்சர், வரகு மிக்சர், ராகி மிக்சர், வரகு முறுக்கு, தினை முறுக்கு, கவுனி முறுக்கு, ராகி முறுக்கு, மாப்பிள்ளைச்சம்பா முறுக்கு, தூயமல்லி முறுக்கு, தினை மனோவளம், கம்பு லட்டு, தினை லட்டு, ராகி லட்டு, மாப்பிள்ளைச்சம்பா லட்டு, கருப்பு உளுந்து லட்டு, பாசிப்பயறு லட்டு, தினை காராச்சேவ், வரகு காராச்சேவ் என சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்த தின்பண்டங்கள் என நீண்டு கொண்டே செல்கிறது. 

மேலும் இங்கு செய்யும் பலகாரங்களில் செயற்கை சாயம், வெள்ளைச்சர்க்கரை, மைதா மாவு, பதப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் என உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எவ்விதமான செயற்கை பொருட்களும் சேர்க்காமல் சுத்தமான கடலெண்ணெய்யில், நாட்டுச்சர்க்கரை, பனை கருப்பட்டி கொண்டு அனைத்து தின்பண்டங்களும் தயாரிக்கப்படுவதால் உணவு ஒவ்வாமை செரிமானக் கோளாறு என எந்தப் பிரச்சனையும் தின்பண்டங்கள் ஏற்படாது 

இத்திண்பண்டங்கள், தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஸ்டிரா, டெல்லி அந்தமான் போன்ற 9 மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு பண்டக சாலை அர்பன் ஸ்டோர், நுகர்பொருள் வானிப கழக அமுதம் அங்காடி, உழவர் சந்தை மதி அங்காடி போன்ற பல்வேறு இடங்களில் இத்திண்பண்டங்கள் கிடைக்கும் 

மேலும் இயற்கை முறையில் விளைவிக்க கூடிய சிறுதானியங்களை கொண்டு பலகாரங்கள் செய்வதால் விவசாயிகளுக்கு இது பலனாக இருக்கும் என்றும் இந்த கம்பெனியில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களுக்கு ஒரு வேளை வாய்ப்பாக அமைகிறது 

கணினி மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் பெற படுவதாகவும் பொதுமக்களும் இந்த பலகாரத்தை வாங்க ஆர்வம் காட்டுவதாலும் கொரோனாவிற்கு பிறகு சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பொதுமக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் கடந்தாண்டை விட இந்தாண்டு ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளதால் சிறுதானிய பலகாரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் பலகார உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். 

மேலும் இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இங்கு செய்யும் பலகாரங்கள் இருப்பதாகவும் வளரும் தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *