இதுதான் தமிழ்நாடு- ஆயுத பூஜையில் கலந்து கொண்ட கிறிஸ்துவ பாதிரியார். 

அரவக்குறிச்சியில் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் ஆயுத பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட கிறிஸ்துவ பாதிரியார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு அதி விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இருசக்கர பழுது நீக்கும் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் , மூன்று சக்கர வாகனங்கள்,  நான்கு சக்கர வாகனங்கள்,  டீக்கடை முதல் பெரிய, பெரிய உணவகம் வரை, 

 பல்வேறு இடங்களில் இன்று ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக தேவைப்படும் பழம், வாழை இலை, வாழை மரம், பொரி, சுண்டல், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை மற்றும் சந்தனம், விபூதி, சூடம், சாம்பிராணி, பூ, மாலை மற்றும் அழகு சாதன அலங்கார பொருட்களை நேற்று காலை முதலே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். 

இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் விடுமுறை என்பதால் பல்வேறு அலுவலகங்களில் நேற்று மாலையே ஆயுத பூஜை விழா ஆங்காங்கே மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் அரவக்குறிச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் ஆர்டிஓ ஆபீஸ் எதிர்புறம் திலகவதி இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை உள்ளது. கடையின் உரிமையாளர் சரவணன் அழைப்பை ஏற்று  கிறிஸ்துவ பாதிரியார் பூஜையில் கலந்து கொண்டு ஜெபம் செய்தார். பின்னர் சாமிக்கு படைத்த பொறி, சுண்டல் உள்ளிட்டவைகளை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆயுத பூஜை விழாவில் கிறிஸ்தவ பாதிரியார் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *