‘சிவம் பேசினால் சவமும் எழும்’ சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை

வத்தலக்குண்டு சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள்.அவர் பிறந்த வத்தலக்குண்டு மண்ணை நெற்றியில் சூடி மணிமண்டபம் கட்ட கோரிக்கை   

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பிறந்தவர் சுப்பிரமணிய சிவா. சிவம் பேசினால் சவமும் எழும் என்பது அவர் கால வழக்கு மொழி.மகாகவி பாரதியாரையும், சுப்பிரமணிய சிவா வையும் சுதந்திர போராட்ட களத்தில் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பர். மகாகவி பாரதி பாடல்களாலும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போராட்டங்களாலும் வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவாவும் கனல் தெறிக்கும் பேச்சாலும் சுதந்திர போராட்ட களத்தில் போராடினர்.

இவர்கள் மூன்று பேரையும் சுதந்திர போராட்ட களத்தில் போராடிய சூலாயுதத்தின் மூன்று முனைகள் என்பர். அதில் பாரதியாருக்கு அவர் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டு விட்டது. அதேபோல வ.உ.சிக்கு தூத்துக்குடி அருகே ஒட்டப்பிடாரத்தில் பிறந்த மண்ணில் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டு விட்டது.

சிவா மறைந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு நூற்றாண்டு முடிய போகிறது ஆனால். இதுவரை மணிமண்டபம் கட்டப்படவில்லை உடலில் தொழுநோய் வந்த போதிலும் ஊர் ஊராக சென்று பிரசங்கம் செய்தவர் சிவா. ஆங்கில அரசு ரயிலில் செல்ல தடை விதித்த போதிலும் உடலில் சாக்கை பொருத்திக்கொண்டு மூடைகளோடு மூடைகளாக ரயிலில் சென்று பல்வேறு ஊர்களில் பிரசங்கம் செய்தார்.

யாவரும் ஒரே ஜாதி பாரத ஜாதி யாவரும் ஒரே மதம் பாரத மதம் யாவருக்கும் ஒரே தெய்வம் பாரத மாதா என்று முழங்கிய சுப்பிரமணிய சிவாவுக்கு வத்தலக்குண்டுவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாளாக நிலவி வருகிறது. சுதந்திர போராளியாக மட்டுமல்லாமல் ஞானபானு, பிரபஞ்சமித்திரன் இதழ்கள் நடத்திசமுதாய சீர்திருத்த போராளியாகவும் இருந்த சுப்பிரமணிய சிவாவுக்கு வத்தலக்குண்டு பேருந்து நிலையத்துக்கு சுப்பிரமணிய சிவா பெயரிடப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் கூட்ட அரங்கில் சிவாவின் திருவுருவப்படம் வரையப்பட்டுள்ளது. அவர் ஆற்றிய அரும்பணிக்கு இதுவெல்லாம் போதாது. கொடைக்கானல் செல்லும் பயணிகள் பார்த்து செல்லும் வகையில் சிவா நினைவு மணிமண்டபம் வத்தலக்குண்டுவில் அமைக்க வேண்டும் அவர் மறைந்து ஒரு நூற்றாண்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் வர இருக்கும் நிலையில் அவருக்கு அவர் மறைந்து ஒரு நூற்றாண்டு வருவதற்குள் அவரது நினைவு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பதே வத்தலக்குண்டு பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

இந்நிலையில் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் பகுதியில் சுப்பிரமணிய சிவாவுக்கு இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிவா ஆர்வலர்கள் சங்க தலைவர் டாக்டர் பொன் அண்ணாதுரை தலைமை வகித்தார் சிவாவின் திருவுருவப்படத்திற்கு  மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர் சிவா பிறந்த தெரு மண்ணை நெற்றியில் சூடி சிவாவுக்கு வத்தலக்குண்டுவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *