மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாணும் நோக்கில் சுங்கச் சாவடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சுங்கக் சாவடி நிர்வாக (TTP) நிர்வாகிகளுடன், ஒன்றிய தொழிலாளர் நல ஆணையர் இன்று பாண்டிச்சேரியில் தொழிலாளர் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்புவிடுத்துள்ளதாக சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை மற்றும் கள்ள குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் சுங்கசாவடிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக 56 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் இரண்டு சுங்கக் சாவடிகளிலும் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களும் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு (01.10.22) தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. 

இதனால்  தேசிய நெடுஞ்சலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் இந்த சுங்கசாவடிகளில் கட்டணமின்றியே பயணித்து வருகின்றன. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்வரை பணிக்கு திரும்ப போவ தில்லை என ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையிலும், சுங்கக் சாவடி நிர்வாகம் (TTPL) ஊழியர்களை அழைத்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் மூன்றாவது நாளாக கட்டண வசூல் இன்றி வாகனங்கள் செல்வதால் ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் திருச்சி சுங்கக் சாவடி நிர்வாகத்தின் (TTPL) நிர்வாகிகளுடன் பாண்டிச்சேரியிலுள்ள ஒன்றி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆணையர் ரமேஷ்குமார் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சுங்கக் சாவடி நிர்வாகிகள் இன்று காலை 10 மணிக்கு பாண்டிச்சேரியிலுள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக சுங்கச் சாவடி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *