மானாமதுரையில் பாண்டிய மன்னர்களின் எழுத்துக்களுடன் கூடிய ‘பீடம்’ கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வாடி வில்லிபுத்திரியேந்தல் அருகே முற்கால பாண்டிய மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த கிரந்த எழுத்துகளுடன் கூடிய ஆவுடை ( பீடம் ) முதன் முதலாக கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, மானாமதுரை உள்ளிட்டவைகள் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவைகள், இப்பகுதியில் முற்கால பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஏராளமான கல்வெட்டுகள், சிவாலயங்கள் இப்பகுதியில் இருந்துள்ளன. 

காலப்போக்கில் அவைகள் மறைந்து விட்டதுடன், கண்டு கொள்ளாமலும் விடப்பட்டுள்ளன. மானாமதுரை பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், தாமரைகண்ணன், சிவகுமார் உள்ளிட்ட குழுவினர் இப்பகுதிகளில் பழங்கால கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். 

அதன்படி வாடி வில்லிபுத்திரியேந்தல் ஊரணி அருகே வெவ்வெறு காலகட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிவலிங்கங்கள் வைக்கப்பட்டிருந்த ஆவுடை என்ற பீடம் கண்டறியப்பட்டது. கிராமமக்களால் விநாயகர் ஆலயம் என வழிபட்ட இந்த ஆலயம் சிவாலயமாக இருந்திருக்கும் என கருதப்படுகிறது. 

இரண்டு ஆவுடையில் ஒன்றில் ஒரு வரி கொண்ட கிரந்த எழுத்துகள் உள்ளன. “ ஸ்ரீயோசீக்ருதிஹோசி” என்ற வரி முழுமையடையாமல் உள்ளது. இந்த சிவலிங்கத்தை செதுக்கிய சிற்பி அல்லது இந்த நாட்டை ஆண்ட மன்னனின் பெயராக இருக்கும் என கருதப்படுகிறது. மீனாட்சி சுந்தரம் கூறுகையில் பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தை சேர்ந்த நாங்கள் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில் சிலர் கொடுத்த தகவலின் பேரில் இந்த ஆவுடை (பீடம்)யை கள ஆய்வு செய்தோம், சதுர வடிவிலான இந்த ஆயுவடையின் ஒரு பகுதியில் கிரந்த எழுத்து உள்ளது. 

இதுவரை ஆவுடையில் எழுத்துகள் ஏதும் கிடைத்ததாக தகவல் இல்லை, முற்கால பாண்டிய மன்னர்கள் காலத்தைச் சேர்ந்ததாக இது இருக்க கூடும், எழுத்துகள் குறித்து கல்வெட்டு ஆய்வாளர் வேதாசலம் கொடுத்த தகவல்படி இது . “ ஸ்ரீயோசீக்ருதிஹோசி” என்ற எழுத்தை குறிக்கிறது. இந்த ஆவுடையை ஆய்வு செய்து பொதுமக்கள் வழிபடுபம்படி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *