கோவை பாஜக அலுவலக பெட்ரோல் குண்டு வீச்சு, பி.எப்.ஐ., நிர்வாகி  கைது!

கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் பி.எப்.ஐ., நிர்வாகி ஒருவர் கைது.! 100 அடி ரோட்டில் நடந்த எரிபொருள் வீச்சுக்கும் இவர்களின் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை – மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேட்டி.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறும் போது : 

கோவை மாநகரில் வி கே கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த 22ஆம் தேதி சுமார் 8:30 மணி அளவில் நடந்த எரிபொருள் வீச்சு வழக்கில் உடனடியாக காவல்துறை இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்திருந்தது.

சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 153a, 285 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டோம். இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், தொழில்நுட்ப அடிப்படையில் புலன் விசாரணை, சாட்சிய விசாரணை என நடைபெற்ற விசாரணை அடிப்படையில் சதாம் உசேன் என்ற நபரை துடியலூர் பகுதியில் கைது செய்தோம்.

அவருடன் வந்தவரை தேடி வருகிறோம். சதாம் உசேனை விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலில் உட்படுத்துவோம். இவர்கள் எப்படி திட்டம் இட்டு சம்பவம் செய்தார்கள். இதில் வேறு யாராவதுக்கு சம்பந்தம் உள்ளதா என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 436, எக்ஸ்ப்லோசிவ் வழக்குகளை இத்துடன் இணைத்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சதாம் உசேன் பி.எப்.ஐ-யில் துடியலூர் பகுதி பொறுப்பாளராக உள்ளார்.

ஏற்கனவே இவர் மீது வழக்கு உள்ளது. அதையும் விசாரித்து வருகிறோம். இதுவரை மாநகரில் மூன்று வழக்குகளை கண்டுபிடித்தோம். அதேபோல இவர்களுக்கு நூறடி சாலையில் நடந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *