இந்தியாவில் இறக்க விரும்புகிறேன் – தலாய் லாமா

திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா இந்தியாவின் சுதந்திர ஜனநாயகத்தில் இறக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். தலாய் லாமாவை அமெரிக்காவின் இளம் தலைவர்கள் சந்தித்து உரையாடிய போது பேசிய தலாய் லாமா, தன் மரணம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதை நினைவு கூர்ந்து விவரித்தார். 

அடுத்த பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் வரை நான் உயிரோடு இருப்பேன், அதில் கேள்விக்கு இடமில்லை என்ற அவர் இறக்கும் நேரம் வரும்போது, நான் இந்தியாவையே தேர்ந்தெடுப்பேன் என்றார்.

இறப்பின் போது, ​​உண்மையான உணர்வுகளை காண்பிக்கும் நம்பகமான நண்பர்களால் ஒருவர் சூழப்பட்டு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். சீன அதிகாரிகள் தலாய் லாமாவை ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் பிரிவினைவாத நபராக கருதுகின்றனர். தலாய் லாமா பல ஆண்டுகளாக திபெத் பிரச்சனை அமைதியான முறையில் தீர்க்க சீனாவுடன் நடுநிலைப் பேச்சுவார்த்தைக்கு வாதிட முயன்று வருகிறார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் உள்ள அவரது இல்லத்தில் இளைஞர் தலைவர்களுடன் இரண்டு நாள் உரையாடலில் ஆன்மீகத் தலைவர் உரையாற்றினார். யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் உரையாடலை நடத்திய தலாய் லாமா நான் இறக்கும் நேரத்தில், நான் இந்தியாவில் இறப்பதையே விரும்புகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *