இம்மானுவேல் சேகரின் சிலையை அகற்ற எதிர்ப்பு, காவல்துறையினர் குவிப்பு..

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட இம்மானுவேல் சேகரின் சிலையை அகற்ற எதிர்ப்பு….. 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்…. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட இமானுவேல் சேகரின் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராடி வருகின்றனர். இமானுவேல் சேகரின் 65 ஆவது குருபூஜை நாளை கொண்டாடப்படுகிறது. 

இதன் காரணமாக விருதுநகர் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் கிராமத்தில் அமச்சியார்பட்டி பகுதியில் அரசு மற்றும் நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெறாமல் அப்பகுதி மக்கள் இம்மானுவேல் சேகர்களுக்கு இன்று காலை சிலை வைத்துள்ளனர். 

இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதி மக்களிடம் முறையான அனுமதி பெற்ற பின்பு தான் சிலைகளை வைக்க வேண்டும் ஆகையால் நீங்கள் வைத்த சிலையை நீங்களே அகற்றி விடுங்கள் என தெரிவித்தனர். 

இதனை ஏற்க மறுத்த பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை பதட்டமாகவே மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் பிரித்திவிராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமரச பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *